டிசம்பர் நான்காம் தேதி மாலை டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஷ்யப் அதிபர் விளாதிமிர் புதின். அவரை நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. சென்ற வருடம் ரஷ்யாவில் நடந்த இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். இவ்வருட மாநாட்டில் கலந்துகொள்ள 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் அதிபர் புதின்.
விமான நிலையத்திலிருந்து தனது காரில் புதினை அழைத்துச் சென்ற மோடி, அவருக்கு இரவு விருந்தளித்தார். காய்கறி சாலட், மீன் வகைகளோடு அவருக்குப் பிடித்த கெஃபீர் பானமும், பிஸ்தா சேர்த்த இனிப்பும் வழங்கப்பட்டன. ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை ஒன்றையும் புதினுக்குப் பரிசளித்துள்ளார் மோடி. இரவு ஓய்வுக்குப் பிறகு ஐந்தாம் தேதி காலை அவருக்கு ராணுவ அணி வகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்ய, இந்திய தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டபோது இரு தலைவர்களாலும் வாயசைக்காமல் இருக்க முடியவில்லை. சிவப்புக் கம்பளத்தின் வழியே நடந்து சென்று ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார் புதின். அவரை வழிநடத்திய ஒவ்வொரு அதிகாரியையும் புன்சிரிப்போடு அங்கீகரித்தார். பிறகு ஹே ராம் பதிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.















Add Comment