ஃப்ரன்ஸ் காஃப்கா
ஆங்கிலத்தில்: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர்
தமிழில்: ஆர். சிவகுமார்
சட்டத்துக்கு வெளியில் ஒரு காவலாளி நிற்கிறான். நாட்டுப்புறத்திலிருந்து வரும் ஒருவன் காவலாளியிடம் சென்று தன்னைச் சட்டத்துக்குள் போக அனுமதிக்கும்படி கேட்கிறான். ஆனால் அந்நேரத்தில் அவனை அனுமதிக்க முடியாது என்று காவலாளி சொல்கிறான். அதைப்பற்றி கொஞ்சம் யோசித்த அவன் அப்படியானால் பிற்பாடு தன்னை அனுமதிக்க முடியுமா என்று கேட்கிறான். “சாத்தியமாகலாம். ஆனால் தற்போது முடியாது’’ என்று காவலாளி சொல்கிறான். எப்போதும் போல சட்டத்தின் கதவு திறந்திருந்ததாலும் காவலாளி பக்கவாட்டில் நகர்ந்ததாலும் உள்ளே பார்ப்பதற்காக அவன் குனிகிறான். அதைக் கவனித்த காவலாளி சிரித்தபடி சொல்கிறான்: ‘நீ அவ்வளவு ஆர்வமாக இருந்தால் என்னுடைய தடையையும் மீறி நீ ஏன் உள்ளேபோக முயலக்கூடாது? ஆனால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள். நான் அதிகாரம் மிக்கவன். இருப்பவர்களிலேயே நான்தான் கடைசிமட்டக் காவலாளி. ஒவ்வொரு அறையிலும் மற்ற காவலாளிகள் இருக்கிறார்கள். முன்னவனைக் காட்டிலும் அடுத்தவன் அதிக அதிகாரம் மிக்கவன். மூன்றாவது காவலாளியின் தோற்றம் என்னாலேயே தாங்க முடியாததாக இருக்கிறது’. நாட்டுப்புறத்திலிருந்து வந்தவன் அவ்வகையான சிக்கல்களை எதிர்பார்த்திருக்கவில்லை;
சட்டத்தை அணுகுவதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கிடைத்தாக வேண்டும் என்று அவன் எண்ணுகிறான்; ஆனால் மென்மயிரால் நெய்யப்பட்ட கோட் அணிந்திருந்த அந்தக் காவலாளியையும் அவனுடைய பெரிய கூரான மூக்கையும் நீண்ட அடர்த்தியான முரட்டுத் தாடியையும் பக்கத்தில் இருந்து பார்த்த பிறகு தனக்கு அனுமதி கிடைக்கும்வரை காத்திருப்பது என்று உண்மையாகவே அவன் தீர்மானிக்கிறான்.
Add Comment