இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸாவில் மூன்று யூதர்களைத் தவறுதலாக கொன்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இம்மூவரும் தப்பித்தோ அல்லது விடுவிக்கப்பட்டோ சென்று கொண்டிருந்தபோது அவர்களை பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் என்றெண்ணிச் சுட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்தது. அவர்கள் கையில் வெள்ளைத் துணியைக் காட்டியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. டெல் அவிவ் நகரில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் மீதம் உள்ள பணயக் கைதிகளை உடனே மீட்கக் கோரியும் ஊர்வலம் நடந்தது. மொசாட் தலைவர் ஐரோப்பா சென்று கத்தார் பிரதமருடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் என்றும் செய்திகள் வெளியாகின.
டிசம்பர் 14-ஆம் தேதி ஒரே சம்பவத்தில் 9 இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். தரைவழித் தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 116 ராணுவ வீரர்கள் இறந்துள்ள நிலையில் மொத்தமாக ஒரே சம்பவத்தில் இத்தனை பேர் இறந்ததுள்ளனர். வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலுக்கு இத்தகைய சேதம் இருப்பதில்லை. ஆனால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை பத்தொன்பதாயிரத்தை நெருங்கியது. அக்டோபர் மாதத்தில் இருந்து 22000 இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஹமாஸ் படையில் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கை என சிஐஏ யூகித்ததே 20000 பேர்தான்.
Add Comment