12. பசுவும் பதியும்
மனித குலத்தின் தொடக்க கால நடவடிக்கைகள், நம்பிக்கைகள், முயற்சிகள், வெற்றி-தோல்விகள் எது ஒன்றனைக் குறித்து அறிய விரும்பினாலும் பண்டைய நாகரிகங்களில் இருந்து ஆரம்பிப்பது சுட்டிக் காட்டுவோருக்குச் சிறிது எளிய செயல். நமக்கு அப்படிச் சிறு வயதுகளிலிருந்தே சுட்டிக்காட்டப்பட்டது, சிந்து வெளி நாகரிகம்.
ஆனால், சுட்டிக் காட்டப்பட்டது மட்டும்தான். அகழ்ந்த நிலங்களின் அடியில் உறைந்தவற்றை யாரும் நமக்குச் சரியாகச் சொல்லித்தந்ததில்லை.
சிந்து வெளி என்று ஆரம்பித்தால், அடுத்த வரி மொஹஞ்சதாரோ-ஹரப்பா. அதற்கடுத்த வரியில் திராவிடப் பண்பாடு, திராவிடக் கலாசாரத்துடன் அதன் பிணைப்பு மற்றும் நெருக்கம். அதற்கும் அடுத்த வரியில் ஆரியப் படையெடுப்பு. அழித்தொழிப்புகள். அதோடு முற்றும்.
என்னுடைய சில கருத்துகளை இங்கு பகிர்கின்றேன் சார்.
பசுபதி முத்திரையைக் கண்டெடுத்து, அது பண்டையச் சிவனாக இருக்கலாம் எனக்கூறிய திரு.ஜான் மார்ஷல் பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர். எனவே, அவரது அனுமானங்கள் இந்து மதத்தின் பக்கம் சாய்த்து எழுதப்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்க யாதொரு முகாந்திரமும் இல்லை.
ஆம். பத்மாசனம் என்றார்கள், யோகநிலை என்றார்கள், பசுபதி என்றார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் பெரும்பாலான உலக அகழ்வாய்வாளர்கள்.
ஜான் மார்ஷல், சிவனின் 5 முகங்களில் 3 முகங்கள் தெளிவாகத் தெரிவதாகக் கூறினார். ஆனால், மற்றொரு ஆய்வாளரான திருமதி.டோரிஸ் ஸ்ரீநிவாசன் முதல் முகத்தின் இரு பக்கங்களில் தெரிபவைக் காதுகளாக இருக்கலாம் என்றார்.
நான் டோரிசுடன் முரண்படுகிறேன். அந்த முத்திரையிலுள்ள விலங்குகளை நன்கு கவனியுங்கள். என்ன ஒரு துல்லியமானச் செதுக்கல்! இத்தனைக்கும் அம்முத்திரை மூன்றரைக்கு மூன்றரை சென்டிமீட்டர்கள் மட்டுமே நீள உயரங்கள் கொண்ட ஒரு சச்சதுரமான வடிவப்பரிமாணம் கொண்டது. எனவே, ஒரு தேர்ந்த கலைஞனால் அது செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன், பசுபதியின் காதுகளைச் செதுக்க எண்ணம் கொண்டிருந்தானானால் இன்னும் தெளிவாக, காதுகள் என நம்பும்படிச் செதுக்கியிருப்பான். என் கண்களுக்கு அவை பக்கவாட்டில் தெரியும் முகங்களாகத்தான் தெரிகின்றன. தெய்வங்களுக்கு பல முகங்களையும் கரங்களையும் படைப்பது நம்மவர்களின் கைப்பக்குவத்தை நினைவுபடுத்துகிறது.
அம்முத்திரையிலிருப்பது சிவன் அல்ல, அது ஒரு புனிதமான காளை மனிதன் என்று சிலர் வாதிட்டாலும், இன்று வரை, உலக அளவில், ஜான் மார்ஷலின் விளக்கத்தைத்தான் பல அகழ்வாய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
எல்லாவற்றையும் விடுத்து, பக்கச்சார்புகள் இல்லாமல், மனதுக்கு நேர்மையாக, முன்முடிவுகள் ஏதுமின்றி நான் அந்த முத்திரையை உற்று நோக்கினேன். மடிக்கப்பட்ட அதன் கால்கள், மடிக்கப்படாமல் நீளவாக்கில் முழங்கால்களைத் தொடும் கரங்கள், மூடியது போன்ற விழிகள், முகத்தின் சாந்தம். அது ஒரு யோகநிலை என்பதை என் உள்மனம் எனக்குச் சொன்னது.
ஜான் மார்ஷலுக்கும் அது தோன்றியிருக்கலாம். அச்சமயத்தில் சிவபெருமான் ஒரு ஆதியோகி என்பது அவருக்கு உரைத்திருக்கும். மனிதர் பிரகாசமடைந்திருப்பார். உடனே முத்திரையிலுள்ள மற்ற சின்னங்களைச் சிவனுடன் தொடர்பு படுத்தியிருப்பார். அது எளிதுதானே.
எனவே, ஜான் மார்ஷலின் விளக்கங்களை, அப்படியெல்லாம் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது என்பது என் கருத்து.
அது சிவன் என்று நிச்சயமாக அறுதியிட்டுக் கூறிவிடமுடியாதுதான். ஆனாலும், அது நிஷ்டையிலுள்ள ஒரு யோகி என்று துணிந்து கூறமுடியும் என்று தோன்றுகிறது.
தங்களுக்குத் தெரியாத சட்டமொன்றுமில்லை. எனவே, இன்னும் கொஞ்சம் விளக்கினால் மிக மகிழ்வேன்.