சுமார் இருபது வருட நீண்ட உறக்கத்திலிருந்து விடுதலை பெற்றார் சவூதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜீஸ் அல் சவுதி. அவருக்கென்று பார்த்துப்பார்த்து வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தனியறையில், மிருதுவான படுக்கையில் படுத்திருந்தார் அல்-வலீத். ‘We love u Dede’ என்று எழுதப்பட்டிருந்த போர்வையொன்று அவர் நெஞ்சுவரை போர்த்தப்பட்டிருந்தது. Dede என்பது அவரது செல்லப்பெயர். வீட்டினர் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்.
வழக்கமாகக் கேட்கும் மருத்துவ உபகரணங்களின் மெல்லிய பீப் ஒலிகள் அன்று கேட்கவில்லை. அவை ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன. பல்லாண்டு காலமாகத் தொழுகைகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்ற இடமென்பதால் அவ்வறை முழுதும் அமைதி சூழ்ந்திருப்பது வழக்கம்தான். இன்று அந்த அமைதியின் அடர்த்தி கூடியிருந்ததோடு அதில் சோகமும் இழைந்தோடிக்கொண்டிருந்தது. தன் மகனையே பார்த்துக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தார் இளவரசர் காலித்.
சவுதி அரச குடும்பத்தின் இளவரசர் காலித்தின் மூத்த மகனாக 1990ஆம் ஆண்டில் பிறந்தவர் இளவரசர் அல்-வலீத். பட்டத்து இளவரசராக இல்லாவிடினும், நவீன சவுதி அரேபியாவின் சிற்பியான அரசர் அப்துல்அஜீஸின் கொள்ளுப் பேரன் என்ற வகையில், இளவரசர் அல்-வலீத் முக்கியமானவர். அவரது பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடியது சவுதி அரச குடும்பம்.















Add Comment