தனிமை, சமூகப் பிரச்சனையாகியுள்ளது தென்கொரியாவில். உலகிலேயே அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளில் தென்கொரியா முக்கியமானது. உலக அளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டவர்களும் இவர்கள் தான். அந்நாட்டின் தற்போதைய சிக்கலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புள்ளிவிவரங்களே போதுமானது.
தென் கொரியா. கார்ப்பரேட் நிறுவனம் முதல் கார் நிறுவனம் வரை பெயர் போனவர்கள். சரி, சீரியல்களுக்கும் தான். கொரியப் போர் ஏற்படுத்திய நாசங்களிலிருந்து மிக விரைவாக மீண்டு அவர்கள் கண்ட அசுர வளர்ச்சியை ‘ஹான் நதிக்கரையில் ஓர் அற்புதம்’ எனக் குறிப்பிடுவார்கள். தலைநகர் சியோலின் நடுவே பாய்ந்தோடி அந்நகருக்கும், நாட்டிற்கும் வளத்தைக் கொடுத்த அதே ஹான் நதியைத் தான் இப்போது பலரும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஹான் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 30 சொச்சம் பாலங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல். வருடத்திற்கு ஐந்நூறு அறுநூறு பேராவது, இனி வாழ்ந்து பயனில்லை எனத் தற்கொலை எண்ணத்தோடு அந்தப் பாலத்தின் விளிம்பில் வந்து நிற்கின்றனர். இப்போதெல்லாம் அது மரணத்தின் பாலம் என்று தான் அறியப்படுகின்றது.
Add Comment