ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் சரி அத்தனை நல்லதாய் இல்லை. மிக அதிகமான வாக்காளர்கள், ஜே.வி.பி கட்சித் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவையே தேர்வு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரணில் அரசு செய்த மிகப் பெரும் முட்டாள்தனம் என்னவென்றால் உயர் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை அத்தனை தரப்பையும் பகைத்துக் கொண்டதுதான். ‘Paye ‘ எனப்படும் மாதாந்த வரியை அரசு அறிமுகம் செய்து முப்பத்தாறு சத வீத உயர் வரி விதித்த போது துறைசார் வல்லுநர்கள் பலர் ரணிலை சந்தித்து, நியாய தர்மப்படி வரி விதிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ரணிலோ, தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் எதுவாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசிக் கொள்ளுமாறும் இளக்காரமாய் சொல்லிவிட்டு எழுந்து போனார். இதனால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தால் மருத்துவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று பல நூற்றுக் கணக்கானோர் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கையும் மீறி அதிக வருமானத்தை அரசு பெற்ற போதிலும் ரணில் இவ்வரியைக் குறைக்க முன்வரவே இல்லை.
இதே போலத் தான் கடந்த ஜுலை மாதம் சம்பள அதிகரிப்புக் கேட்ட சாமானிய அரச ஊழியர்களுக்கும் நடந்தது. சம்பள அதிகரிப்புக்குப் பதிலாகக் கண்ணீர்ப் புகையும், தடியடியுமே பரிசாகக் கிடைத்தன. இந்த நாட்டின் சுமையே அரச ஊழியர்கள் தான் என்று திட்டித் தீர்த்தார் ரணில்.
Add Comment