டெஸ்லா மூலமாகத் தரைவழியாக இந்திய வணிகத்தில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் மூலம் வான்வழியாகத் தரையிறங்குகிறார். இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரிய நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்கைக்கோள்கள் வழியாக இணையச் சேவையை வழங்கி வருகிறது ஸ்டார்லிங் நிறுவனம். வியாசாட் போன்ற பல நிறுவனங்களும் செயற்கைக்கோள்கள் மூலமாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் அதிவேக இணையச் சேவையை ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் மட்டுமே வழங்க முடிகிறது. பூமியிலிருந்து குறைந்த தொலைவில் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிறுவியிருப்பதுதான் காரணம். பூமியிலிருந்து 36000 கிமீ தொலைவிலிருக்கும் ஜியோஸ்டேஷனரி ஆர்பிட் என்னும் பகுதியில் செயற்கைக்கோளை நிறுத்தி அதன் மூலமாக சேவையை அளிப்பது வியாசாட் போன்ற நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறை.
அதிக தொலைவில் இருப்பதன் காரணமாக இரண்டு கருவிகளும் தொடர்புகொள்ளும் வேகம் குறைவாக இருக்கும். இதனால் அதிவேக இணையத் தொடர்புக்கான சாத்தியம் மிகக்குறைவாக இருந்தது. இதனைக் கவனத்தில் கொண்டுதான் ஸ்டார்லிங்க் தனது தனித்துவமான வணிக உத்தியை 2015ஆம் ஆண்டு உருவாக்கியது. பூமியிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் Low Earth Orbit பகுதியில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை நிறுவி அதன்வழியாக இணையச் சேவையை வழங்குவதுதான் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வணிக உத்தி. இப்படிச் செய்வதன் வழியாகக் கருவிகளின் தொடர்புகொள்ளும் வேகத்தை அதிகரிக்க முடியும். தரைவழியாக கட்டமைப்பை உருவாக்க இயலாத இடங்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதும் இதனால் சாத்தியமானது.
Add Comment