“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள், போரை முடித்து, மத்தியக் கிழக்கிற்குப் போர் பரவுவதையும் தடுக்கும்” என்கிறார்.
“ஹமாஸை ஒழித்த மறுநாளே, காஸாவில் போர் முடிவுக்கு வரும். அமைதி திரும்பிய பிறகு, இஸ்ரேல் காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதற்காக மீள்குடியேற்றம் செய்யும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. தீவிரவாதிகளிடமிருந்து காஸா மக்களைப் பத்திரமாகப் பாதுகாக்க, இஸ்ரேலின் படை அங்கு நிறுத்தப்படும்” என்று போருக்குப் பிறகான திட்டத்தை அறிவித்திருக்கிறார் பிரதமர் நெதன்யாகு. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி இந்த உரையை வரவேற்றுள்ளனர்.
ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ரஷீதா, ‘போர்க் குற்றவாளி’, ‘இனப்படுகொலைக்காக வெட்கப்படுகிறோம்’ என்று எழுதியிருந்த அட்டைகளை உயர்த்திக் காட்டியபடியே அமர்ந்திருந்தார். நான்சி பெலோசி போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதையே தவிர்த்தார்கள். அங்கிருந்த இன்னும் சிலர், காஸாவில் நடக்கும் மனித இன அத்துமீறல்களைப் பட்டியலிட்டு, இது அமெரிக்கா தலையிட்டுத் தடுக்க வேண்டிய விஷயமல்ல. நாமும் இதற்கு உடந்தையாக இருந்தே, இதைச் செய்து வருகிறோம், நிறுத்த வேண்டும் என்றார்கள்.
Add Comment