வெடிபொருள்கள்
வருடம் 1991. மே மாதத்தின் இருபத்தோராம் நாள். இந்தியாவின் கறுப்பு தினங்களுள் ஒன்றாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்தத் துயரத்தின் எச்சங்களை இன்னமும் ஏந்திக்கொண்டிருக்கிறது திருப்பெரும்புதூர்.
குறிப்பிட்ட நாளில் உரையாற்றுவதற்காக மேடையில் ஏறினார் ராஜிவ். பள்ளிக் குழந்தைகள் அவருக்கு மாலை அணிவித்தும் பூச்செண்டுகள் கொடுத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஓர் இளம்பெண் இன்னும் ஒருபடி மேலே சென்று அவரது பாதங்களைத் தொட்டார். அப்போது மணி இரவு சுமார் பத்து. வெடிச்சத்தம் காதைப் பிளந்தது. எங்கும் நெருப்பு, புகை, சிதறிய உடல் பாகங்கள், அழுகுரல்கள், மரண ஓலங்கள்.
ராஜிவுடன் சேர்த்துப் பதினாறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாற்பத்து மூன்று பேர் கொடுங்காயங்கள் அடைந்தனர். எண்ணற்றோர் காயத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகினர். இன்றும் கூட அந்தக் காயங்களையும் அதிர்ச்சியையும் உடலாலும் மனத்தாலும் தங்கிக்கொண்டு வாழ்ந்து வருவோர் உள்ளனர். இத்துயரச் சம்பவத்துக்கான காரணங்கள், விளைவுகள் போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். நாம் இந்தச் சம்பவத்தின் புலனாய்விலுள்ள தடயவியல் கூறுகளை மட்டும் இங்கு காண்போம்.
Add Comment