தடயவியல் – ஓர் அறிமுகம்
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னால் தடயவியலைப் பற்றி அதிகம் பேர் பேசியதில்லை. அதன் மீது நிழற்திரை படர்ந்தே இருந்தது. ஆனால், தற்சமயம் இந்த இயல் பெரிய பேசுபொருளாக உள்ளது. அதன்மீது ஊடகங்கள், குறிப்பாக வெப் சீரீஸ்கள் பாய்ச்சிய ஒளி இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் கூட, தடயவியல் முறைகளை நுட்பமாகக் காட்சிப்படுத்திட மெனக்கெடுவதைப் பார்க்க முடிகிறது.
தடயவியல் என்பது என்ன? உண்மையில் அது எப்போது கண்டறியப்பட்டது?
எளிமையாகச் சொல்வதெனில், வேதியியல், இயற்பியல், உயிரியல், உளவியல், மருத்துவம், மானுடவியல், பொறியியல் போன்ற அறிவியலின் பல்வேறு துறைகளை, பலதரப்பட்ட குற்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தும் கலப்பு அறிவியலே ‘தடய அறிவியல்’ அல்லது ‘தடயவியல்’ எனப்படுகிறது.
சரி, இம்முறை எப்போது கண்டறியப்பட்டது என அறிய காலத்தில் பின்னோக்கிச் செல்லும்போது, “யூ டூ புரூட்டஸ்?” என்ற வரிகள் நம் காதில் விழுகின்றன. ஆம். நாம் நின்று கொண்டிருப்பது கி.மு. 44-ஆம் ஆண்டில்! பண்டைய ரோமில் ஜூலியஸ் சீசர் குத்திக் கொல்லப்படுவதை நாம் காண்கிறோம். நல்ல வேளையாக ஷேக்ஸ்பியரின் புண்ணியத்தில் நமக்கு ஜூலியஸ் சீசரின் கதை நன்கு பரிச்சயமாக உள்ளது. புரூட்டஸ் உள்ளிட்டோர் அரசியல் காரணங்களுக்காக சீசரை வாளால் குத்திக் கொன்றனர். அப்போது ரோம் ராஜ்ஜியத்தில் மருத்துவராக இருந்த ஆண்டிஸ்டியூஸ் (Antistius) சீசரின் உடற்கூராய்வைச் செய்தார். சீசரின் உடலில் 23 காயங்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் கூர்மையான பொருளால் குத்தியதால் ஏற்பட்டவை எனவும் அவர் கூறினார். மேலும், அந்த 23 காயங்களில் மார்பில் ஏற்பட்ட காயம்தான் மரணத்திற்குக் காரணம் என்றும் அவர் சான்றளித்தார். இதுதான் நமக்குத் தெரிந்த வரையில் முதல் தடயவியல் ஆய்வறிக்கை.
The flow of content/story delivery is very catchy. Thank you for such writing to exploring the forensic learning zone to the normal readers. Waiting for upcoming chapters…