ஆட்சிக் கவிழ்ப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகாரிகளின் அதிகார வெறிகள், ஜனநாயகம் என்ற பெயரில் வழக்கமான பித்தலாட்டங்கள், ஊழல்வாதிகளின் மீள்பிரவேச எத்தனங்கள், வழக்கமான மக்கள் ஏமாற்றங்கள் என்று 2023-ம் ஆண்டும் ஒரு சாதா தோசைதான். இருந்தாலும் சில சம்பவங்கள் கொஞ்சம் புருவம் உயர்த்த வைக்கின்றன. சில நிகழ்வுகள் இப்படி எல்லாம் எப்படி சாத்தியமானது என்று திகைக்க வைக்கின்றன. அவ்வளவு யோசிக்க ஒன்றுமில்லை…. ஆப்பிரிக்கத் தேசங்களில் எழுந்து இருக்கும் மேற்கத்தேய எதிர்ப்பும் சரி, அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் அதிரடித் தாக்குதல்களும் சரி உலகத்திற்குப் புதுசு கண்ணா புதுசுதான். இதன் விளைவுகள் தந்து கொண்டிருக்கும் சமநிலைக் குழப்பங்களும், பக்கவாதங்களும் வழக்கமான உலக ஒழுங்கில் ஏகப்பட்ட கருங்கற்களை வாரியிறைத்து இருக்கின்றன என்றே முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது..
சரி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடத்து மறைந்து கொண்டிருக்கும் 2023-ம் ஆண்டிற்கு திடீர் ஸ்பீட் ப்ரேக்கர் போட்டு முக்கியத் தருணங்களை கொஞ்சம் ஆறஅமர அசைபோட்டு விடலாம்.
உலகத்தின் நம்பர் 1 புலனாய்வுத் துறை என்ற தம்பட்டம், அறிவியலில் அபார வளர்ச்சி, கணக்கு வழக்கில்லாத நவீனரக ஆயுதங்கள், அமெரிக்கா என்ற மற்றொரு சூப்பர் பவரின் நிரந்தர ஆசீர்வாதம், பக்கபலமாய் பெரியப்பாக்கள் போல ஐரோப்பிய நாடுகள் என்று சகல ஜோடனைகளுடனும் இருந்த இஸ்ரேல், ஹமாஸை ஊதித்தள்ளிவிடும் என்றே ஆரம்பத்தில் எதிர்வுகூறப்பட்டது. தமிழ் சினிமாவில் வில்லன்களை தாக்கமுனையும் கதாநாயக மகனுக்கு ‘ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாதே’ என்று வீர உபதேசம் புரியும் தாய்மாதிரி, பிரதமர் நெத்தன்யாகு தன் படைகளிடம் பிரம்மாணட எதிர்பார்ப்பு வசனங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தார். ஆனால் இன்றோ நிலமை தலைகீழ். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அப்பாவி காஸா வாசிகள் பதினெட்டாயிரம் பேர் துடிதுடித்து மாண்டதுதான் மிச்சம். ஹமாஸை அசைக்க முடியாமல் திணறிப் போய் திரிசங்கு நிலையில் இருக்கிறது இஸ்ரேல்.
Add Comment