16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை
நாள்: 9 – நவ – 1989.
இடம்: கிழக்கு ஜெர்மனி.
நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு.
“பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று அறிவித்தார் ஷபாவ்ஸ்கி. கிழக்கு ஜெர்மனியின் அரசு அதிகாரி. எப்போதிருந்து என்ற நிருபரின் கேள்விக்கு, “இப்போதிருந்தே தடையின்றி இது அனுமதிக்கப்படும்” என்ற பதில் அதிர்ச்சியளித்தது. இதுவே அன்றைய மாலை தலைப்புச் செய்தியானது. “இன்றைய நாள் வரலாற்றில் முக்கியத்துவம் பெறப்போகிறது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் எல்லைக் கதவுகள் எல்லோருக்கும் திறந்து விடப்படுகின்றன. இனி திறந்தே இருக்கும்.” என்று அறிவித்தார், செய்தித் தொகுப்பாளர் ஹான்ஸ் யோவாகீம்.
கிழக்கு ஜெர்மனி மக்கள் இதனைக் காதுகுளிரக் கேட்டார்கள். இதற்காகத்தான் ஆண்டுக்கணக்கில் காத்திருந்தார்கள். இரவு ஒன்பது மணியளவில், கூட்டம் கூட்டமாக மக்கள் எல்லையை நோக்கி அணிவகுத்தனர். மேற்கு ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இரவு பதினோரு மணியளவில், எவ்வித அடையாள சோதனைகளுமின்றி, எல்லையைக் கடந்துசெல்ல முடிந்தது.
Add Comment