கடின உழைப்பாளி
நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது. அங்கு வந்திருந்த ஒருவரிடம் டை ஒன்றைக் கடன் வாங்கிக் கழுத்தில் கட்டிக் கொண்டு இண்டர்வியூவில் பங்கேற்றார். அவருக்கு வேலையும் கிடைத்தது. இதுதான் புனித் ரெஞ்செனின் முதல் வேலை கிடைத்த அனுபவம். அவருக்கு வேலை கொடுத்த நிறுவனம் தையல் மெஷின்கள் தயாரிக்கும் உஷா நிறுவனம்.
புனித் ரெஞ்செனின் தந்தையார் லாகூரில் பிறந்தவர். அவருக்குப் பதினெட்டு வயதிருக்கும் போது இங்கிலாந்து சென்று பொறியியல் கல்வி கற்கத் தயாராக இருந்தார். அந்நேரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியாவிற்கு அகதியாக வரும் நிலைமை வந்தது. எதிர்பாராத, அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத இந்நிகழ்வால் அவரது வாழ்க்கைப் பாதையில் ஒரு பாரிய மாற்றம். அவர் ரோதாக் என்னுமிடத்தில் குடியேறினார். அங்கு ஒரு எலெக்டிரிகல் சுவிச் கியர் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினார். எதிர்பாராத இடத்தில் குடியேறினாலும் சென்ற இடத்தில் தன்னை வளர்த்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. தனது வளர்ச்சியோடு மட்டும் நிற்காமல் தான் வாழும் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் ரோதாக் நகரில் முதலாவது தனியார் பள்ளியையும் நிறுவினார்.
Add Comment