“நாங்கள் இந்தியாவைத் தேடி வரவில்லை, இந்தியா எங்களைக் கண்டு கொண்டது” என்று வெளிப்படையாகச் சொன்னார் நமி ஜர்ரிங்கலாம் (Nami Zarringhalam). அவர் குறிப்பிட்டது, 2009ஆம் ஆண்டு ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் அவரும் அலன் மமேடியும் (Alan Mamedi) தொடங்கிய ட்ரூகாலர் (TrueCaller) செயலியின் வியாபார ரகசியத்தை. இன்று சுமார் முப்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் செல்பேசியில் பயன்படுத்தும் ட்ரூகாலர் எப்படி உருவாகியது?
ஸ்வீடன் குடிமக்களான இருவருமே மத்தியக் கிழக்கு பின்னணியைச் சேர்ந்தவர்கள். அலன் குர்திஷ் மரபைச் சேர்ந்தவர். நமி ஈரானிய-பாரசீக மரபைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டில் கேடிஎச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இளங்கலை கணினி அறிவியல் (பி.எஸ்சி.) படிக்கத் தொடங்கியதிலிருந்து அலனும் நமியும் நண்பர்களானார்கள். இருவருக்கும் தங்களின் தேவைகளுக்காக நிரல்களை எழுதிப் பார்ப்பதில் அதிகமான ஈடுபாடு. அப்படி அவர்கள் உருவாக்கி, தங்களின் முதல் வியாபாரமாக மாறியது Möbeljakt.se என்கிற வீட்டு அறைக்கலன்களைத் தேடும் இணையத்தளம். அடுத்ததாகத் தயாரிக்கப்பட்டது, வேலைச் செய்யும் நிறுவனத்தைப் பற்றிய கருத்துகளை ஊழியர்கள் பொது வெளியில் பகிர்வதை ஊக்குவிக்கும் தளமான Jobbigt.se. அன்றைய ஐரோப்பாவில் இரண்டுமே புதுமையான முயற்சிகள்.
Add Comment