சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்தார். அவர் வந்து என்ன பேசினார், யார் யாரைச் சந்தித்தார், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதெல்லாம் பின்னால் போய்விட்டன. டிரம்ப்புக்கு அமீரகத்தில் அளிக்கப்பட்ட அய்யாலா நடன வரவேற்பு உலகெங்கும் இன்று பேசுபொருளாகிவிட்டது. திடீரென்று இன்ஸ்டக்ராம் ரீல்களிலும் டிக்டாக் ரீல்களிலும் ஃபேஸ்புக் ரீல்களிலும் ஆளாளுக்குத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ஜிங்கு ஜிங்கென்று ஆடுவதைப் பார்க்கிறோம். இதற்குமுன் இல்லாத அளவுக்கு இப்போது இது பிரபலமாகியிருக்கிறது.
உண்மையில், அயாலா அல்லது அல்-அய்யாலா நடனம் அமீரகத்திலும் ஓமனிலும் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியக் கலை வடிவமாகும். அரேபியத் தீபகற்பத்தில் பல நூற்றாண்டுகளாக பெதுவின் பழங்குடியினர், பாலைவனம் முழுக்க பரவி இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அந்தப் பாலைவன மக்களின் கலாசாரத்தில் அயாலா நடனம் தோன்றியுள்ளது.
போருக்குப் போகும் முன் பழங்குடியினரின் தயார் நிலையைக் குறிக்கவும், போரில் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடவும் அயாலாவை ஆடிக் கொண்டாடி இருக்கிறார்கள். அதன் அசைவுகளும் போர்க்கால நடனங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
அல்-அய்யாலா நடனத்தில் இரண்டு வரிசைகளில் இருபது அல்லது அதற்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் எதிராக நின்று, ஒரு நடைமுறை போர்க் காட்சியை உருவகப்படுத்துகிறார்கள்.
நடனக் கலைஞர்கள் மென்மையான மூங்கில் கோல்களைப் பிடித்துக் கொண்டு ஆடுகிறார்கள். சில நேரங்களில், அம்புகள் அல்லது வாள்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தோளோடு தோள் நின்று, தங்கள் இடது கையை அருகில் உள்ளவரின் முதுகில் வைத்திருப்பார்கள். இசைக்கு ஏற்றார் போல் அசைவுகள் இருக்கும்.














Add Comment