ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் தேதி முடிவாகவில்லை. பேச்சுவார்த்தையில் பேசப்போவது அமெரிக்காவும், ரஷ்யாவும். வல்லரசுகள் இரண்டும் வர்த்தகம் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்க மட்டுமே உக்ரைன் பணிக்கப்படும்.
போரின் தற்போதைய நிலையில் தென்கிழக்கு உக்ரைனின் நான்காயிரம் சதுர கிமீ நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் இருபது சதவீதம் இது. டொனெஸ்க், லுஹான்ஸ்க், கெர்சோன் மற்றும் ஸாப்ரோசேஷியா என்ற இப்பகுதிகளும் இதில் வாழும் மூன்றரை மில்லியன் மக்களும் இனி ரஷ்யாவுக்குச் சொந்தம். கிரீமியா ஏற்கனவே 2014ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவுடையதுதான். இந்த ஐந்து பகுதியினரும் ஏற்கனவே சென்ற ஆண்டு ரஷ்யத் தேர்தலில் வாக்களித்து புதினை தங்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். சுதந்திரமாக நடந்த இந்த வாக்கெடுப்பில் ஒரேயொரு துப்பாக்கி ஏந்திய காவலர் மட்டுமே வாக்களிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அருகில் நின்றிருந்தார்.
போர் நிறுத்தம் என்றால் இந்த நான்கு பகுதிகளும், கிரீமியாவும் உக்ரைனுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, ரஷ்யாவின் கூர்ஸ்க் பகுதியை நாங்கள் திருப்பித் தருகிறோம் என்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி. அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் வரை, இதையே வழிமொழிந்தன மேற்குலகமும், ஐரோப்பிய ஒன்றியமும். அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் வந்துதான் நடைமுறை சாத்தியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். ‘இப்படியே பிதற்றிக் கொண்டிருந்தீர்கள் என்றால் போரும், அழிவும் நிற்கப் போவதில்லை’ என்கிறார்.
Add Comment