மூன்று மில்லியன் டாலர் லஞ்சப் பணம். கையும் பணமுமாகக் கைதானது – உக்ரைனின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சீவலொத் கன்யாஸிவ். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அலுவலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வந்து குவியும் லஞ்சப்பணத்தை, முறையே கணக்கு வைத்துக் கொள்வதற்கு.
லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் ஸ்டிங் ஆபரேஷனில் மாட்டியிருக்கிறார். அங்கே இராணுவம் ஸ்டிங்கர் ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கிறது. சிக்கியது தொழிலதிபரோ, அரசியல்வாதியோ என்றால், இது வழக்கமான ஒன்று. அன்றாடம் நம் நாட்டிலும் நடப்பதுதான். இங்கே சிக்கியது, நாட்டின் நீதியரசர். உக்ரைனின் ஒழுக்கநெறி, இங்கு கேள்விக்குறியாகிறது.
உக்ரைனில் எக்காலத்திலும் மூட்டைப்பூச்சிகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. மக்களின் இரத்தத்தை உறிஞ்சிப் பெருக்கும் ஊழல் மூட்டைப்பூச்சிகளுக்கு. சோவியத்திலிருந்து சுதந்திரம் கிடைத்தும், இதிலிருந்து கிடைத்த பாடில்லை. பதவிக்கு வந்ததும் அதிபர் ஜெலன்ஸ்கி இதையொழிக்க இறங்கினார். பொறுக்க முடியாமல், ரஷ்யாவும் இதிலிறங்கியது. ஒரேயொரு வித்தியாசம் தான். மருந்தடித்து ஒழிக்கப் பார்க்கிறார் ஜெலன்ஸ்கி. தீ வைத்துக் கொளுத்துகிறார் புடின்.
Add Comment