7. வெள்ளி பிஸ்கட்
எண்ணிப் பார்த்தால் புன்னகை செய்வீர்கள். கடந்த ஜனவரி இறுதியில் எல்லாம் மேற்கத்திய ஊடகங்களில் ஒரே பாடல், ஒரே ராகம்தான். உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவிக்கிறது. போர் நெருங்கிவிட்டது. உக்ரைனை உலக நாடுகள் காக்கும்; ரஷ்யா சின்னபின்னமாகிப் போகும்.
ஆனால் இன்றைய நிலவரம் என்ன? போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைனுக்கு உலக நாடுகள் பல உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும் எதுவும் போதாத நிலை. ஏராளமான மேற்கத்திய வர்த்தக நெட் ஒர்க்குகள் ரஷ்யாவில் தங்கள் கடைகளை மூடிக்கொண்டு போயின. இனி அங்கே இண்டர்நெட் இருக்காது, மின்சாரம் இருக்காது, ஓட்டல் இருக்காது, உருளைக் கிழங்கு இருக்காது என்று என்னென்னவோ ஆரூடங்கள். ரஷ்ய நாணயத்தின் மதிப்பு சுக்கு பெறாமல் போய்விடும் என்றார்கள். உண்மையில் வரலாறு காணாத வகையில் இப்போதுதான் ரஷ்யன் ரூபிள் பீம புஷ்டி ஆகிக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் ரஷ்யாவின் மீது விதித்த தடைகளையெல்லாம் ரஷ்யா பிற நாடுகளின் மீது விதிக்கும் தடைகள் விழுங்கி, கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன.
நிலவரம் தெரியாமல் புதின் போரைத் தொடங்கிவிட்டார் என்று பேசியவர்கள் இன்று யோசிக்கிறார்கள்.
Add Comment