44 ம.பொ.சிவஞானம் (20.06.1906 – 03.10.1995)
தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் இந்தியா என்ற தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் அதே அளவு பற்றுடன் இருக்க முடியும் என்று காண்பித்தவர்; ‘பல்கலைக்கழகங்களில் படித்த நாங்கள் உணர இயலாதவற்றை எளிய மொழியில் இத்தனை அழகாக விளக்கும் இவருடைய திறத்தை என்னவென்பது?’ என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் வியந்த தமிழறிஞர். குடும்பச்சூழல், வறுமை காரணமாக குழந்தைப்பருவத்திலேயே வேலை தேடும் நிலையில் முறையான பள்ளி, கல்லூரிக் கல்வியெல்லாம் கிடைக்கப் பெறாதிருந்தும், ஆழ்ந்த தமிழறிஞராகவும், பல்கலைக்கழகங்கள் போற்றிய ஆய்வறிஞராகவும் இருந்தவர்; சிலப்பதிகாரக் காப்பியத்தை ஒரு தனித்த இயக்கம் போன்றே நடத்தி, ‘சிலம்புச் செல்வர்’ என்று இரா.பி.சேதுப்பிள்ளையால் பாராட்டுப் பெற்றவர். பாரதியாரை ஆழ்ந்து கற்று, பாரதியாரின் படைப்புகளைப் பற்றிய ஆய்வு நூல்களைப் பல்சிறப்பு நோக்கில் ‘பாரதி இலக்கியம்’ என்ற பிரிவே ஏற்படுத்திச்சொல்லலாம் என்ற அளவில் விவரித்துச் சிறப்பித்தவர்.
சென்னை மாநகர் தமிழ்நாட்டின் பகுதியாக இன்று இருப்பதற்கான முக்கியக் காரணம் அவர்தான். தமிழ்த் தேசிய அரசியலைத் தமிழகத்தில் முதன்முதலில் எடுத்த அரசியல்தலைவர், தமிழறிஞர் அவர். அவரது முயற்சிதான் இன்றைய தமிழ்நாட்டின் மாநில எல்லைகளை வரையறை செய்ய உதவி செய்தது. இத்தனை பணிகளும் செய்ததோடு ஏறத்தாழ நூற்று ஐம்பது நூல்களையும் எழுதியவர்!. திருவள்ளுவர், இராமலிங்க அடிகள், பாரதியார் என்று மாபெரும் ஆளுமைகளைப் பற்றிய தனித்தனி விளக்க நூல்களை எழுதியவர். சிலப்பதிகாரத்துக்காகத் தனியாக விழா எடுத்து, அதனை ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டியவர்.பின்னர் இது ஒரு மாபெரும் அனைத்துக் கட்சியினர் விழாவாக மாறியது. 1978’ஆம் ஆண்டு அவரைத் தமிழக அரசின் மேலவைத் தலைவராக நியமித்து மகிழ்ந்த கணத்தில் அன்றைய முதல்வர் ம.கோ.இரா. ‘இங்கே சிவஞானம் என்ற பெயரில் தமிழ் அமர்ந்திருக்கிறது; தமிழைக் காக்க மேலவையில் தமிழையே அமர வைக்கிறோம். தமிழக எல்லைகளுக்குச் சொந்தமானவர் அவர்’ என்ற போற்றிப் புகழ்ந்தார். இந்திய அரசின் கமல விருதைப் (பத்ம சிரீ) பெற்றவர். பத்திரிகையாளர், சமூகப் பணியாளர், தமிழ்த் தேசிய அரசியல் போராளி, தமிழறிஞர், அனைவரும் மதித்துப் போற்றிய அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்ட சிலம்புச் செல்வர் மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்ற ம.பொ.சிவஞானம் அவர்களே இந்தவார உயிருக்கு நேர் பகுதி 44’க்கான நாயகர்.
Add Comment