41 ஞா. தேவநேயப் பாவாணர் (07.02.1902 – 15.01.1981)
தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன. தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின் தனித்தமிழ் இயக்க வேர்களில் ஒருவராக இருந்தவர். மறைமலையடிகள் போற்றிச் சான்றளித்த அடுத்த தலைமுறை மொழி விற்பன்னர். எவரிடமும் அடிபணிந்து நில்லாத, சமசரங்களுக்கு அப்பாற்பட்ட அரிமா நோக்குனர். உரையாசிரியர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், திறனாய்வாளர் என்று பன்முக நோக்கில் தமிழ்மொழித் தொண்டாற்றியவர். தனது வாழ்க்கைப்பாடே பெருஞ்சிரமத்துக்கு இடையில் சென்று கொண்டிருந்த போதும், சம்பளம் தரும் பணியை இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்து வெளியேறிய மேன்மைவாதி. தனது எந்த எழுத்திலும் பட்டறிவும், படிப்பறிவும் மின்னும் வகையில் கருத்துக்களை எடுத்து வைக்கத் தெரிந்த மொழியாற்றலும், நுண்ணறிவும் கொண்டிருந்தவர்.
தனது வாழ்நாள் முழுதும் நேசித்த மொழி சார்ந்த கடமையான உலகத் தமிழ் மாநாட்டில் 75 மணித்துளிகள் பேருரை நிகழ்த்தி அமைந்த போதில் மாரடைப்பு ஏற்பட்டு நிறைந்தவர். தனது பிறவிக்கு ஆழமான நோக்குண்டு என்று தெளிவான சிந்தனையுடன் இயங்கியவர். ‘தமிழ் உலக மொழிகளில் மூத்ததும், மிகமிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான வடிவம் கொண்டிருந்ததும், திராவிடப் பகுதிகளின் மொழிகளுக்கு தாய்மொழியாகவும், ஆரிய மொழிகளுக்கும் மூல மொழியாவும் விளங்குவது என்பதை மேலை நாட்டறிஞரும் ஒப்ப நிலைநாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்’ என்ற கருதுகோளை தனது வாழ்வு முழுதும் உரத்த குரலில் முன்வைத்தவர்; அது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர். பாவாணர் வழி என்று அவரது வழிவந்து தொடர்ந்த மூன்று தலைமுறை தமிழியலாளர்கள் வரக் காரணமாக இருந்த இயக்கு விசை.
Add Comment