46 பாலூர் கண்ணப்ப முதலியார் (14.12.1908 – 29.03.1971)
தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வரிசையில் வரலாற்று ஆசிரியர்கள், கல்வெட்டு ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள் என்று பல புலங்களில் சிறப்பான பணிகளைச் செய்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வரலாற்று ஆய்வு நூல்கள், இலக்கியங்களின் திறனாய்வு நூல்கள் அல்லது சொற்பொழிவுகள் என்று அமைந்திருக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட ஒரு தமிழ்ப்புலத்தின் சிறப்பான தனிப்பிரிவில் விற்பன்னராகப் பலர் பங்களிப்புகள் செய்யாதிருந்தாலும், மாணவர்களுக்குத் தேவைப்படுகின்ற கல்வி நூல்களை ஆக்கியவர்கள் வரிசையில் அரும்பணி புரிந்தவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களது கல்விப் பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு பங்களிப்பை அளித்த தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார்.
பள்ளி மாணவர்களுக்கான, கல்லூரி மாணவர்களுக்கான நூல்களைப் படைத்தவர் என்ற அளவில் பாலூர் கண்ணப்ப முதலியாரது பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நூல் வரலாறு என்று சிறப்புப் புலத்தில் எழுந்த இரண்டு ஆய்வு நூல்களும் அவரது பங்களிப்பில் இணையான முதன்மை பெற்றவை . தம் காலத்தின் பத்திரிகையாசிரியர்கள், இதழாளர்கள் பலரோடு நல்ல நட்புக் கொண்டிருந்த இவரது மணிவிழா சமயத்தில், பரலி சு.நெல்லையப்பர் அவரைப் பாராட்டி கவி வாழ்த்து அளித்ததோடு 30 ரூபாய் பணவிடையாகவும் அனுப்பி மகிழ்ந்ததைப் பதிவு செய்கிறார் கண்ணப்பர். இவ்வார ‘உயிருக்கு நேர்’ பகுதியில் அவரது வாழ்வையும் தமிழிலக்கியப் பங்களிப்பைப் பற்றியும் தெரிந்து தெளிவோம்.
Add Comment