43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981)
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார் திடீரென்று காலமாகி மறைந்தார். பாதியில் நிற்கின்ற இது போன்ற தமிழ்த்தொண்டுகள் தமிழுலகுக்குப் புதியதன்று. இந்த உரையை யாரை வைத்து முழுமை செய்வது? கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த செயல் இது. வேங்கடாசலம் பிள்ளை சிறிதும் துணுக்குறாது அழைத்த நபர்தான் அவரது முன்னாள் மாணவராக இருந்த நமது இக்கட்டுரையின் நாயகர். நாவலர் நாட்டார் எழுதி வைத்திருந்தவையோடு கூடுதலாகக் கடைசி நான்கு படலங்களுக்குத் தமது உரையை எழுதிச் சேர்ந்து அந்தப் பணியை நிறைவு செய்தார் உரைவேந்தர் என்ற புகழ்ப்பெயர் கொண்ட நமது நாயகர்.
முறையாகக் கல்லூரிக்குக்கூடச் சென்று படிக்கும் வாய்ப்புக் கிட்டாதவர் அவர்; குடும்பச் சூழல் அப்படி. பள்ளிக் கல்வி முடித்து, இடைநிலைத் தேர்வு எழுதிய நிலையிலேயே குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தலையில் வந்தமர்ந்தது. நலத் தூய்மைப் பணியாளர் கண்காணி (சானிடரி இன்சுபெக்டர்) வேலைக்குப் போனார் அவர். ஆனால் பின்னாட்களில் பல பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக, ஆராய்ச்சிப் பணியராக அமர்ந்து தமிழ்த்தொண்டாற்றியவர் அவர். திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக்கல்லூரியில் ஆய்வறிஞராக ஓராண்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் ஆய்வுத் துறை விரிவுரையாளராக எட்டு ஆண்டுகள், மதுரைத் தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராக 1951’ஆம் ஆண்டு முதல் பணி என்று பல பல்கலைக் கழகங்கள் அவரை விரும்பி அழைத்துப் பணி கொடுத்தன. கல்லூரி கூடச் சென்று படிக்காத அந்த அறிஞர், அந்த அளவுக்குத் தமது தமிழறிவை, ஆய்வுத் திறத்தை உயர்த்திக்கொண்டவர்.














Add Comment