வ. ராமசாமி (17.09.1889 – 23.08.1951)
சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி ஐயங்கார். பாரதியின் மற்ற அனைத்து அடையாளங்களையும் விஞ்சி நின்ற பொருண்மைக் கவிதையாதலால் அவர் சாகாவரம் பெற்ற மகாகவி என்ற அடையாளம் பெற்றார். பாரதியாரைப் போலவே, அதே தீவிரத் தன்மையுடன் சுதந்திர இந்தியச் சிந்தனையும் சமூகச் சிந்தனையும் கொண்டிருந்தவர் வ.ரா. வ.ரா சிறந்த நாவலாசிரியர்; வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்; ஏராளமான கட்டுரைகளைப் படைத்த உரைநடை நூலாசிரியர்; சிறந்த இதழாளராகப் பத்து இதழ்களில் பணி புரிந்தவர்; சிறந்த மொழி பெயர்ப்பாளர்; ‘வாழ்க்கைச் சித்திரம்’ என்ற புதிய இலக்கிய வகையையும், ‘உயர் கற்பனை நெடுங்கதை’ என்னும் இலக்கியத்தின் வகையையும் முதல்முதலாகத் தமிழ்மொழிக்கு அறிமுகம் செய்தவர். இவற்றோடு சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தீரமிக்க விடுதலைப் போராட்ட வீரர். அனைத்தினுக்கும் சிகரமாகத் தலைசிறந்த சமூக சீர்திருத்தச் சிந்தனைகளையும், பெண் விடுதலைச் சிந்தனைகளையும் கொண்டிருந்தவர்.
Add Comment