100. பாதி சரி
நான் சார்வாகனின் சிந்தைக்குள் இருந்தேன். அவனது சிந்தை, அவனாலேயே இயக்கப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். இத்தகைய தருணங்களில் அவன் மல்லனுக்காகச் சிந்திக்கும் காதல் மொழிகள் அறுபட்டு நின்றுவிட்டால் அவன் அங்கே என்ன செய்வான் என்று எண்ணிப் பார்த்தேன். உண்மையில் என்னால் ஒரு மனிதன் சிந்திக்காமல் உறைந்து நிற்கும் கோலத்தை விரித்துணர இயலவில்லை. மூச்சிருக்கும் ஒருவனுக்குச் சிந்தை செயல்படாதிருக்க முடியும். சிந்தை செயலாற்றும்போது உயிரினங்களின் மூச்சு நின்றுவிட்டால் என்னாகும்? சிந்தையும் பொருளற்றுப் போகுமென்பது தவிர இன்னொன்றில்லை.
இது தோன்றியபோது நான் கருவூர்ச் சித்தரை எண்ணிக்கொண்டேன். அவர் மட்டுமா. எத்தனையோ சித்தர்கள் உயிர் வளியையும் சிந்தையையும் ஒன்றாக்கிக்கொள்ளவில்லையா. உடலமெனும் சருகை எண்ணிய கணத்தில் உதிர்த்துவிட்டு வேறு பணி நாடிச் செல்வதும், தேவை ஏற்படும் தோறும் மீண்டும் வந்து அதே சருகை இலையாக்கி, அதன் பச்சையமாகப் படர்ந்து நிறைவதும் காலம் தோறும் நிகழவே செய்கிறது. ஒரு மண்டல காலத்துக்கு இச்சார்வாகன் கருவூராருடன் இருக்கப் போவது நிச்சயமென்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு நேர்வதையும் தன்னை இயக்குபவர்களையும் தன் மூலமாக நிகழ்த்த அவர்கள் திட்டமிட்டிருப்பதையும் அவன் எப்படி அறியப் போகிறான் என்பதுகூட எனக்கு அப்போது முதன்மையானதாகத் தோன்றவில்லை. கருவூரார் அவனிடத்தில் எத்தனை ஆழத்துக்குத் தாக்கம் ஏற்படுத்தப் போகிறார் என்பதே என் ஆர்வத்தின் ஊற்றுக்கண்ணாகிப் போனது. எந்தச் சார்வாகனுக்கு இப்படியொரு வாய்ப்பு அமையும்? கனவே போன்றதுதான். சந்தேகமேயில்லை. ஆனால் கனவேயில்லாத வெளியில் உலவுபவனுக்குத்தான் அது வாய்க்கிறது.
சுரங்க வழியை மூடிக் கிடந்த படிக்கல்லின் மீது சித்தர் அமர்ந்திருந்தார். அதற்கு இரண்டு படிகள் கீழாகச் சார்வாகன் அமர்ந்திருந்தான். சித்தரிடத்தில் அப்போது அவன் தெரிந்துகொள்ள விரும்பியதெல்லாம் ஒன்றே. அதை அவன் பல விதமாக மீண்டும் மீண்டும் கேட்டான்.
நீங்கள் என் அருகே இல்லாதபோது என் சிந்தை இன்னொரு தரப்பினரால் ஆளப்படுகிறது என்றால், உங்களைக் காண்பதற்கு முன்பு, இன்னும் சரியாகச் சொல்வதெனில் பிறந்தது முதல் அதை ஆண்டுகொண்டிருந்தவர்கள் அவர்கள்தானா?











Add Comment