இந்திய அரசியலில் அயோத்தி ராமர் கோவில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய சிக்கலாக நீடித்திருந்தது. மத அமைப்புகளால் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட இந்த விவகாரத்தால் நாட்டில் மிகப் பெரிய கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்தன. தற்போது மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு இந்த ராமர் கோவில் விவகாரமே முக்கியக் காரணமாக இருந்தது.
ஏறக்குறைய நூற்று நாற்பது வருடங்களுக்கு முன்பாக நீதிமன்றப் படியேறிய இந்த விவகாரம், 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உத்தரவிட்டபோது முடிவுக்கு வந்தது. அந்தத் தீர்ப்பில், ராமர் கோவில் கட்டுவதற்காக அந்த இடத்தை ஓர் அறக்கட்டளையிடம் ஒப்படைத்து, கோவில் கட்டப்படுவதை அரசாங்கம் மேற்பார்வையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி, 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வையில் ராமர் கோவில் கட்டப்பட்டு 2024 ஜனவரி 22ஆம் தேதி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பல அரசியல்வாதிகள், பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ஆயிரக்கணக்கான சாதுக்கள், சந்நியாசிகள் மற்றும் இந்து மதத் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். தொலைக்காட்சி நேரலையில் இந்நிகழ்வு பல கோடி மக்களால் பார்க்கப்பட்டது.
















Add Comment