98. விந்தை சூழ் வெளி
கோயிலுக்குள் நுழைவது குறித்து உனக்குச் சங்கடம் ஏதும் இல்லையா என்று காளத்தி கேட்டான்.
யாரொருவர் குறுக்கீடும் இல்லாமல் எனக்குத் தோன்றிய வண்ணம் என் நாள்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். எதுவுமே இல்லாதிருந்த போதும் என் மகிழ்ச்சியில் எந்தக் குறைவும் ஏற்பட்டதில்லை. மண்ணுக்கு உடலத்தையும் விண்ணுக்குப் பார்வையையும் அளித்துவிட்டு நதிப் படுகையில் ஏகாந்தமாகக் கிடந்தவனை இழுத்துச் சென்று எதையெதையோ சொல்லி எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான் பார்த்தாயா உன் குருநாதன்? கோயிலல்ல என் சங்கடம். உன் கூட்டத்தாரே சங்கடம்,
என்று சார்வாகன் சொன்னான்.
நிசும்பசூதனி ஆலயத்தின் முன் மண்டபத்தில் எதிரே இருப்போர் முகமும் தெரியாத அளவில் இருள் அடர்ந்து நிறைந்திருந்தது. அமாவாசை நாள் இல்லாத போதிலும் வானில் நிலவின்றி இருந்தது. இரவுப் பூச்சிகளின் மெல்லிய ரீங்காரமன்றி வேறு சத்தமில்லை. உதுமானி நாயனாரின் மாணாக்கர்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் யார் எந்த உருவில் இருந்தார்கள், எங்கே இருந்துகொண்டு பேசுகிறார்கள் என்று சார்வாகனுக்குத் தென்படவில்லை. அவன் அதை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. அவன் அறிந்துகொள்ள விரும்பியதெல்லாம் ஒன்றுதான்.
என்னை எதற்காகக் கருவூர்ச் சித்தர் நதிக்கரைக்குத் திரும்பிச் செல்ல வைத்து, அங்கிருந்து இங்கே மீண்டும் நடந்து வர வைத்தார்?











Add Comment