இன்றைய காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் அதை மட்டும் கணக்கெடுப்பதில்லை. சமூக நிலை, பொருளாதார நிலை, கல்வி நிலை, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பலவற்றையும் அப்பதிவேடுகள் பராமரிக்கின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான் மக்கள்நலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன, பேரிடர்க் காலங்கள் கையாளப்படுகின்றன, மக்களுடைய எதிர்காலத் தேவைகள் கணிக்கப்படுகின்றன.
தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்க்கப்பட்டுள்ளதால், இக்கணக்கெடுப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆரம்பக் காலங்களிலோ, இக்கணக்கெடுப்புகள் மக்களுக்காக அல்லாமல் ஆள்பவர்களுக்கானவையாக இருந்தன.
வரலாறு முழுவதும் ஒவ்வொரு நிலப்பிரபுத்துவ அரசுக்கும் மக்கள்தொகையைக் கணக்கிடுவது என்பது ஏதோ ஒரு வடிவத்தில் இன்றியமையாததாக இருந்தது. நிலம் வைத்திருப்போரையும், வரி செலுத்துவோரையும், கட்டாய ராணுவச் சேவைக்காக உடல் தகுதி வாய்ந்த ஆண்களையும் கணக்கெடுப்பதே அதன் முதன்மை நோக்கங்கள். அவ்வகையில் அவை, பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்த, தரப்படுத்தப்பட்ட ஆய்வு முறைகளைக் கொண்ட நவீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து வெகுவாக மாறுபட்டு இருந்தன.
















Add Comment