101. இச்சை
ஆன்பொருநையில்* நீர் ததும்பி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையோரம் திட்டுத் திட்டாக நாணற்புதர்கள் திரண்டு செழித்திருந்தன. கண்ணெட்டும் தொலைவெல்லாம் போந்தை மரங்கள் நெடிதோங்கி வளர்ந்திருந்தன. நதி தீரத்தினின்று நகருக்குள் செல்லும் சாலைகள் அனைத்தும் செம்மண் பாவியிருந்தன. எல்லா சாலைகளின் ஓரங்களிலும் ஒன்றிரண்டு வருக்கைப் பலா மரங்களேனும் இருந்தன. மரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வெளில்கள்* நினைத்துக்கொண்டாற்போல நிலத்தில் பாய்ந்து, சாலையின் குறுக்கே ஓடி எதிர்ப்புற மரங்களில் தாவியேறி மறைவதைச் சார்வாகன் ரசித்தபடி நடந்தான். அப்படி மரங்களிலிருந்து குதிக்கும் வெளில்களில் ஒன்றேனும் தன் மீது விழுமா என்று ஒன்றிரண்டு முறை நின்று பார்த்தான். கருவூர்ச் சித்தர் சிரித்தார்.
ஏன் சிரிக்கிறீர்கள்?
அவை உன் மீது விழாது.
உங்கள் மீது விழுமோ?
சொன்னால் விழும்.
எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்?
சித்தர் ஒரு பலா மரத்தினடியில் நின்று மேலே பார்த்தார். அந்நொடியே இரண்டு அணில்கள் அவரது இரண்டு தோள்களின் மீதும் பொத்தென்று விழுந்தன. சித்தர் அவற்றை எடுத்து வருடிக் கொடுத்துக் கீழே விட்டார். அவை ஓடி மறைந்ததும்,
என்னைக் குமையச் செய்வதில் அப்படி ஓர் ஆனந்தம் உமக்கு,
என்று சார்வாகன் சொன்னான்.











Add Comment