105. தோல்வி ருசி
ஒன்றைக் கண்டுகொண்டேன். கருவூரார், சார்வாகனின் வினாவுக்கு விடையளிக்க மட்டும் நினைக்கவில்லை. அவனது வழியிலேயே அவனைச் செலுத்திக்கொண்டு சென்று, அவனை இயக்கும் தரப்பினரை நெருங்கப் பார்க்கிறார். அவர் பாரதாய தத்தனின் பெயரை உச்சரித்ததுமே எனக்கு இது விளங்கிவிட்டது. சார்வாகனுக்கு அவர் தத்தனைக் குறித்துப் பேச்செடுத்தது சற்று வியப்பாகத்தான் இருந்தது. இப்போது அவனைச் சந்தித்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்தான். ஆனால் ஏதோ ஒரு நோக்கத்தின் பொருட்டே அவர் அதனைச் செய்கிறார் என்பதை அவனால் கண்டுகொள்ள முடிந்ததே அல்லாமல், அந்நோக்கம் என்னவாக இருக்குமென்று விளங்கவில்லை.
எனக்குப் புரிந்தது. சித்தருடையது சரியான திட்டம் என்பது தவிர, அதற்கு மாற்று வேறில்லை என்பதும் துல்லியமாக விளங்கியது. அது விளங்கிவிட்ட நொடியே நான் சார்வாகனின் சிந்தையினின்று வெளியேறி, மல்லனைக் கருதி, அவனது சிந்தைக்கு இடம் பெயர்ந்தேன். இன்னொருவன் ஏறி அமராத வரை சார்வாகனின் சிந்தையில் சாத்விகமன்றி இன்னொன்று இருக்கப் போவதில்லை. கருவூராரின் நிழலில் இருக்கும்வரை இன்னொருவர் அவனை ஆள்வதென்ற பேச்சுக்கும் இடமில்லை. இடைப்பட்ட கிழமைகளில் மல்லனும் அவனது காதலியான மயூரமும் தவித்துத்தான் போயிருப்பார்கள்.
இரண்டாவது முறையாக அவர்கள் சார்வாகனைக் கண்டபின்பும் தொலைத்திருக்கிறார்கள். இது அவர்களாலேயே மன்னிக்க இயலாத பெருங்குற்றமாகத்தான் தோன்றும். நிச்சயமாகவே மயூரம் இதனை வேட்டனின் கவனத்துக்குக் கொண்டு செல்ல விரும்பியிருக்கும். அல்லது நேரடியாக அதன் தாயின் கவனத்துக்கு. இங்கு நிகழ்வதை நிகர்த்த முக்கியத்துவம் அங்கு நிகழ்வதற்கும் உண்டல்லவா? அதனால்தான் நான் மல்லனின் சிந்தையைக் கருதி, அதனுட் புகுந்தேன்.











Add Comment