39. சாரம்
முறிந்து விழுந்த கிளையொன்றை நதி வெள்ளம் அள்ளி ஏந்திக்கொண்டு விரைவது போல அவன் தனதிரு கரங்களிலும் தத்தனைத் தூக்கிச் சுமந்துகொண்டு ஓடத் தொடங்கினான். எங்கே செல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. வந்த பாதையில் வசிப்பிடம் ஏதுமில்லை. ஓர் ஒட்டுச்சேரி தென்பட்டால்கூடப் போதும். உதவிக்கு மனிதர்கள் கிடைத்துவிடுவார்கள். உதவியென்ன. வேண்டியது ஒரு வைத்தியர். அவரது இருப்பிடம் அறிந்து சொல்ல ஒரு நபர் வேண்டும். அவ்வளவுதான். ஆனால் இதென்ன, சோழ தேசத்தில் வசிக்கும் ஆயிரமாயிரம் பேரில் ஒருவர் கூடவா தஞ்சப்புரி செல்லும் சாலையில் எதிர்ப்பட மாட்டார்? சோழன் புதிதாக ஒரு கோயில் எடுப்பிக்கும் பணியில் முனைந்திருக்கிறான். தேசம் முழுவதும் இருந்து எத்தனை எத்தனையோ பேர் அணி அணியாகப் புறப்பட்டுப் போகிறார்கள் என்று பறையறைந்து தெரிவித்ததாகப் பேசிக்கொண்டார்களே. அவர்களெல்லாம் எந்தப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்?
அவன் ஓடிய வேகத்தில் சிந்தித்துக்கொண்டும் இருந்தான். இது ஒரு தருணம். இயற்கை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் தருணம். நான் இதைத் தவறவிடக் கூடாதென்று நினைத்தேன்.











Add Comment