92. ரேகை
உதுமானி நாயனாரும் அவரது சீடர்களும் சார்வாகனும் இருந்த கைவிடப்பட்ட படித்துறைக்கு மேலே மயூரம் பறந்து வந்தபோது எனக்கு மல்லனின் தவத்தின் மீது மிகுந்த மதிப்பு உண்டானது. அவன் வெறும் காதலனல்லன். சார்வாகனைப் போல முற்றிலும் தன் சித்தத்தை இன்னொருவனுக்காக அர்ப்பணித்துவிடாமல், ஒரு தேவை உண்டாகும்போது அதனை இழுத்து ஒன்றன்பால் நிலைநிறுத்தத் தெரிந்திருக்கிறது.
பனிப்பாளங்களுக்கு அடியில் தன்னைப் புதைத்துக்கொண்டு அவன் சார்வாகனைக் கருதியே தவம் இருந்திருக்கிறான். காலடித் தடமல்ல, அவனது சுவாசத்தின் சத்தத்தையும் உணர்ந்தறிய இயலாத வண்ணம் உயர்ந்தோங்கிய தடமதில்கள் அவனைச் சூழ்ந்திருந்தன. அது கருவூர்ச் சித்தரின் சித்தம். அவர் தன்னைச் சுருக்கிக்கொண்டு அவனது துரியத்தில் பதுமமிட்டு அமர்ந்திருந்தார். அவர் அங்கே இருந்தவரை இமச் சிகரங்களின் உச்சியில் பனிப்பாளங்களின் அடியில் தன்னைப் புதைத்துக்கொண்டு தவமிருந்த மல்லனுக்குச் சார்வாகன் என்கிற நரனின் இருப்பிடம் தென்பட்டிருக்கச் சிறிதும் வாய்ப்பில்லை. ஆனால் எந்தக் கணம் சித்தர் அவனது ஏழாம் சக்கரத்தினின்று இறங்கி வெளிப்பட்டாரோ, அப்போது மல்லன் தனது தவத்தில் அவனது இருப்பைக் கண்டுவிட்டான்.
அதுதான். அந்தத் தூய தவத்தினைத்தான் வியந்தேன். எத்தனை துல்லியம், எவ்வளவு நேர்த்தி, சற்றும் கவனம் பிசகாத நோக்கம். நொடிப் பொழுது அவனுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. அந்த ஒரு நொடி எப்போது தனது மாய வாயிற் கதவினைத் திறக்கும் என்பதுதான் சூக்குமம்.











Add Comment