14 நாடகக் காதல்
முத்துவின் அப்பா நாடகத் துறையில் ஈடுபாடுள்ளவர். இளம் வயதில் பல நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியவர். நடிக்கவும் செய்வார். கேரி தீவின் தேர்க்கொட்டகையில் இருந்து தேரை வெளியே எடுத்தபிறகு அங்கே மேடை அமைப்பார்கள். அதில் நாடகம் நடத்துவார்கள். முத்துவின் நினைவில் இருந்து அவர் பார்த்த முதல் நாடகம் ‘நடைப்பிணம்’. குடும்பமே கலைக் குடும்பம்தான். அப்பா, மாமா, சித்தப்பா அனைவரும் அதில் நடித்தார்கள். முத்துவின் அப்பா தீய வழியில் சென்று இறுதியில் இறக்கும்படியான காட்சி. துப்பாக்கியால் அவரைச் சுட்டதும் நெஞ்சில் கைவைத்து சட்டைப்பையில் தயாராக வைத்திருக்கும் சிவப்புச்சாயம் நிரப்பிய முட்டையை உடைத்துக் கீழே விழவேண்டும். முட்டையில் இருந்து வழிந்தோடிய ‘இரத்தத்தை’விட அதைக் கண்ட முத்துவின் கண்ணில் வழிந்தோடிய கண்ணீர் அதிகம்.
எவ்வளவு சமாதானப்படுத்தியும் தேம்பித் தேம்பி அழுதார். முதல்முறை மட்டுமல்ல, எப்போது எந்த நாடகம் போட்டாலும் அப்பா கஷ்டப்படும் காட்சி வந்தால் கண்ணீரும் வந்துவிடும். கூட்டம் காட்சியை ரசித்துக் கைதட்டிக் கொண்டிருக்கும். குடும்பத்தினரோ, முத்துவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது நிலவொளியில் வீட்டின் முற்றத்தில் ஆர்மோனியப் பெட்டியுடன் உட்கார்ந்து கொள்வார் முத்துவின் அப்பா. அம்மாவும் முத்துவும் சகோதரர்களும் சுற்றி உட்கார்ந்து கொள்ள, பாடல்களைப் பாடி மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார்கள்.
Add Comment