24 யாதும் மொழியே யாவரும் கேளிர்
வட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முத்து, ஒரு கோயிலுக்குச் சென்றார். பழங்காலக் கோயில்களில் ஏதேனும் கல்வெட்டுகள் இருப்பின் அவற்றில் இருக்கும் எழுத்துகளை ஆராய்வது அவருக்கு விருப்பமான ஒன்று. அவர் சென்றிருந்த கோயில், நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எனவே தன் பங்குக்குக் கொஞ்சம் நிதியுதவி அளிக்க விரும்பினார். கோயில் அலுவலகத்தில் இருப்பவரிடம் சென்று நிதி வழங்க விரும்புவதாகச் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். ஆங்கிலத்தில்தான்.
அலுவலகப் பணியாளர் இந்தியில் மறு மொழி கூறினார். முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதைச் சொன்னதும் பணியாளருக்குக் கோபம் வந்துவிட்டது. திட்ட ஆரம்பித்துவிட்டார். முத்து என்ன பேசினாலும் கோபம் தலைக்கேறி இன்னும் வேகமாகப் பேசினார் அந்த நபர். தன்னுடைய பாஸ்போர்டை எடுத்துக் காண்பித்து, தனக்கு அவர் பேசும் மொழி புரியவில்லை என்ற பிறகே தன் தவறை உணர்ந்தார் அந்த ஊழியர். பார்க்க இந்தியர் போல இருப்பதால், இந்தி தெரியவில்லையே என்று கோபம் வந்துவிட்டது. வெளிநாட்டுக்காரர் என்பதை அறிந்து நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு பல முறை மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
முத்துவின் செயலிகளையும் எழுத்துருக்களையும் பல கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அவர்தான் இதைச் செய்தார் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தியரைப் போல இருப்பதால் இந்தியாவில் யாரிடமாவது இதை உருவாக்கியது நான்தான் என்று தெரிவிக்கும் சூழல் நேர்ந்தால் கொஞ்சம் சந்தேகத்துடன் நம்புவார்கள். ஆனால் வெளிநாடு என்றால் துளி கூட நம்ப மாட்டார்கள்.
Add Comment