ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் உலகமே கைவிட்டாலும், பற்றிக்கொள்ள உறுதியான ஒரு கை கிடைத்திருந்தது. ஜவகர்லால் நேரு. நாட்டின் தலைவராக அறிவியலின்பால் அவர் காட்டிய அற்புதமான ஈடுபாடு, அன்றைய அந்த இளைஞர்களுக்குக் கடும் உத்வேகத்தைக் கொடுத்தது.
ஆனால் துரதிர்ஷ்டம்… தும்பாவிலிருந்து ராக்கெட் விட்ட அடுத்த நாள், டெல்லியில் சுகவீனமுற்ற நேருஜியை, சில மாதங்களில் மரணம் தழுவிக் கொண்டது! விக்ரம் சாராபாயின் குழுவினருக்கோ, தமது கனவுகளை அரவணைத்த அந்த மாமனிதரின் மறைவு, பேரிடியாக வந்திறங்கியது. பணிகளின் வேகமும் கொஞ்சம் சறுக்கத்தான் செய்தது. ஒன்று மட்டும் புரிந்தது. பூலோகப் பனிப்போருக்குள் உத்தியோகபூர்வமாக நுழைந்து கொள்வதற்கு இன்னும் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை அவர்களுக்கு.
Add Comment