ஃப்ரன்ஸ் காஃப்கா
ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர்.
தமிழில்: ஆர். சிவகுமார்
நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது. வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்து கொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய் உறைபனியால் போர்த்தப்பட்டுள்ளன; தன்னிடம் உதவியைத்தேடும் எவருக்கும் எதிராக ஒரு வெள்ளி அரணைப் போல வானம். எனக்கு நிலக்கரி அவசியம் வேண்டும்; விறைத்துப்போய் இறப்பதற்கு என்னால் முடியாது; எனக்குப் பின்னால் இரக்கமற்ற அடுப்பு. முன்னால் இரக்கமற்ற வானம்; எனவே, இரண்டுக்கும் இடையே ஒரு பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டும்; பயணத்தின் முடிவில் நிலக்கரி விற்பனையாளரிடம் உதவிகோர வேண்டும். ஆனால், சாதாரண கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்பதை அவர் ஏற்கனவே நிறுத்திவிட்டார்; என்னிடம் ஒரு துணுக்கு நிலக்கரிகூட மிச்சம் இல்லை என்பதையும் அவர் எனக்கு வானத்தில் உள்ள சூரியனைப் போன்றவர் என்பதையும் அவர் மறுக்க முடியாத அளவுக்கு நான் நிரூபித்தாக வேண்டும். தொண்டையில் மரணத்தின் இரைச்சல் ஏற்கனவே கேட்கத் தொடங்கிவிட்ட ஒரு பிச்சைக்காரனைப்போல நான் அந்த விற்பனையாளரை அணுகவேண்டும்; பணத்திமிர் கொண்டவர்களின் வாசற்படியில் உயிரை விட்டுவிடுவேன் என்று ஒரு பிச்சைக்காரன் வலியுறுத்திச் சொல்லும்போது அவர்களுடைய சமையற்காரன் காஃபி குவளையின் அடி வண்டலை அவனுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கிறான்; அதைப்போல நிலக்கரி விற்பனையாளர், பெரும் கோபம் கொண்டாலும், ‘கொலை செய்யாதே’ என்ற கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மண்வாரி அளவுக்கு நிலக்கரியை என்னுடைய வாளிக்குள் வீசி எறியவேண்டும்.
Add Comment