“இவரு பிறந்தது,வளர்ந்தது எல்லாமே கடலூர்,சிதம்பரம் பக்கமுள்ள இளவடிங்கற ஊர்லங்க. அங்க இவருக்கு மன்னாருன்னு பேரு. பள்ளிப் படிப்பு முடிச்சிருக்காரு. இவருக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் போஸ்ட்மேன் வேலை கிடைச்சிருக்கு. தபால்கள் அடங்கிய பையைச் சுமந்துக்கிட்டு ஓட்டமும் நடையுமாக ஊர் ஊராகச் சுற்றும் வேலை. 17வயதிலேயே இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. ஆனா, இல்லற வாழ்க்கையில இவருக்கு பெருசா நாட்டமில்லங்க. அதனால அதிலிருந்து விலகி சந்நியாசியா மாறிட்டாரு” – சந்நியாசி வரதசாமிகளின் பூர்வாசிரமத்தைப் பற்றிக் கோயில் குருக்கள் ஹரிபிரசாத் நம்மிடம் தெரிவித்தவை இவை.
தபால் பையினைச் சுமந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றி, கடிதங்களை உரிய முகவரியில் சேர்ப்பித்த மன்னார் சாமிக்கு, ஞானத்தைத் தேடி ஓடும் ஆவல் வந்திருக்கிறது. ஆனால், ஞானம் எங்கிருக்கிறது என்னும் சரியான முகவரியைக் கண்டுபிடிக்க இந்த தபால்காரரால் முடியவில்லை. தேசாந்திரியாகப் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்த அவர் இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் சேலம் மாவட்டத்தில் தளவாய்ப்பட்டியில் உள்ள குபேர மலை. இந்த மலையின் மீது ஆரம்ப காலம் முதலே பெருமாள்கோயில் ஒன்று இருந்துவருகிறது. தளவாய்பட்டியில் உள்ள மக்கள் இந்த மலையில் விளக்குக் கம்பம் ஒன்றை அமைத்து, அங்கு விளக்கேற்றிப் பெருமாளை வழிபட்டு வந்துள்ளனர். இதில் ஓர் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த குபேரமலை மீது ஆண்கள் மட்டுமே ஏறிச் சென்று வருவது வழக்கமாம். பெண்களின் கால்படாத இடமாக இந்தக் குபேர மலை இருந்துள்ளது. அதேபோல, இந்த மலையில் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய மாவினால் செய்த பிரசாதத்தினைப் பெண்கள் சாப்பிடுவது கிடையாதாம். இங்கு வந்த மன்னார்சாமி பல ஆண்டுகள் குபேர மலையில் தங்கி தியானம் புரிந்துள்ளார். இங்கு சந்நியாசிக் கோலத்தில் இருந்ததனால் சந்நியாசி வரதசாமிகள் என்று மக்கள் அவரை அழைக்கலாயினர். ஒரு காலகட்டத்தில் இந்தக் குபேரமலைக்கு வந்த சங்கிலி சாமிகள் என்பவரைச் சந்நியாசி வரதசாமிகள் குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்தத் தீட்சைக்குப் பிறகு சந்நியாசி வரதசாமிகள் நிர்வாணக் கோலத்திற்கு மாறியதாகவும், இறுதி வரையிலும் அவர் நிர்வாணக் கோலத்தில் இருந்தே கடந்த 1898-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் சதய நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்ததாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் பாலாம்பிகை அம்மாள்தான் இவருக்குத் தீட்சை கொடுத்ததாகவும் தகவல்கள் உண்டு. எப்படியோ மன்னார் என்கிற தபால்காரருக்கு ஞானம் என்கிற கடிதம் கிடைத்த சரியான முகவரியாக தளவாய்பட்டி குபேரமலை விளங்குகிறது.
Add Comment