வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் அதிரடியாகச் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 2013ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவைத் தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த மதுரோவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் உலகின் பெரியண்ணன் டொனால்டு டிரம்ப். அதன் முடிவில் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போது இருவரும் நியூயார்க் நகரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள் என்பதைத் தனது முதல் ஆட்சிக் காலத்திலிருந்தே வெளிப்படுத்தி வந்துள்ளார் டிரம்ப். அக்குறிகோளை அடைவதற்கு எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என்று கடந்த சில மாதங்களாக எச்சரித்தும் வந்துள்ளார். அதன் பொருட்டு 2025 ஆகஸ்டு மாதத்திலிருந்து வெனிசுவேலாவை ஒட்டியுள்ள கரீபியக் கடலில் அமெரிக்கக் கடற்படையையும் தளவாடங்களையும் குவிக்க உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆண்டின் இறுதி வரை வெனிசுவேலாவைச் சேர்ந்தவை எனச் சந்தேகப்பட்ட சிறு கப்பல்கள் மற்றும் படகுகள் மீது முப்பத்தைந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 115 பேர் கொல்லப்பட்ட இத்தாக்குதல்களைப் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்றது அமெரிக்கா. மதுரோ அரசு போதைப் பொருள் பயங்கரவாதத்தை (narco-terrorism) ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே தனது ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது டிரம்ப் அரசு.













Add Comment