அந்த மாணவனுக்குக் கணினி அறிவியல் மிகவும் இஷ்டம். ஆனால் கணக்கு வராது. ஆங்கிலம் அடியோடு வராது. ப்ளஸ் டூவில் அவன் சேரும்போது கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்தோடு சேர்ந்ததுதான் கணினி அறிவியல் பாடப் பிரிவு (Computer science group). ஆனாலும் கணினி படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை.
கணினிப் பாடப் பிரிவைக் கேட்டான். தலைமையாசிரியரோ உனக்கு ஆங்கிலம் வராது, வேறு பாடப்பிரிவு எடுத்துக் கொள் என கைகாட்டினார். இல்லே சார். சமாளிச்சுக்குவேன். ஆங்கிலம் நல்லா படிச்சுக்குவேன் என்று கெஞ்சிக் கூத்தாடி, கணினிப் பாடப்பிரிவை வாங்கி விட்டான். மாங்கு மாங்கென்று படித்தான். பொதுத்தேர்வில் கணினிப் பாடத்தில் நூற்றியெண்பது மதிப்பெண்கள். அதிசயமாக ஆங்கிலத்திலும் தேறிவிட்டான். ஆனால் கணிதத்தில் பெயில். டிகிரி படிக்க வழியில்லை. அப்பாவின் தானிய வியாபாரம் பார்த்தான். பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் வேலையில் சேர்ந்தான். இன்னும் எங்கெங்கோ ஏதேதோ வேலை. இருந்தாலும் கணினி மென்பொருள் உருவாக்கம் சார்ந்த கனவுகள் உள்ளுக்குள் உருண்டு கொண்டே இருந்தன. வெறுமனே பிழைப்பு மட்டும் அல்ல வாழ்க்கை. அது லட்சியத்தோடு, தன் ஆர்வத்தோடு இயைந்தது. தன் லட்சியம் ஆர்வம் எல்லாமே இந்த கணினி மென்பொருள்தான். எங்கே போனாலும், எந்த வேலை செய்தாலும் சிந்தனை மொத்தமும் அதன் மீதுதான்.
அதன் விளைவு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் என்னும் குக்கிராமத்தில் விஷுவல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்தார். அது இந்த வருடம் பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இவர் உருவாக்கிய விவசாயம், சித்த மருத்துவம், கோலம் போடுதல் போன்ற பதினைந்து செயலிகள் (app) சில மாதங்களில் லட்சக்கணக்கில் தரவிரக்கம் செய்யப்பட்டவை. இன்றைக்குப் பல இணைய இதழ்களின் தொழில் நுட்பப் பங்களிப்புகள் இவருடையதாக இருக்கிறது. திரள் (செய்திகளைச் சேகரித்து வகைப்படுத்தும் செயலி) அக்ரி சக்தி (தரவு அறிவியல் சார்ந்த விவசாய மின்னிதழ்) என்ற வேறு முகங்களும் உண்டு. விவசாயத் துறையில் மென்பொருள் நுட்பத்தை இணைத்து தொழில் நுட்ப ரீதியாகப் பல முக்கிய ஆராய்ச்சிப் பணிகளைச் செய்கிறார். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் பல இவரைத் தேடி வந்தன. அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டார். என்ன செய்தாலும் என் கிராமத்தில் இருந்தே செய்வேன் என்று விடாப்பிடியாக மத்தூரிலேயே இருந்து செயல்படுகிறார். தமிழ்க்கணினி பணிகளுக்காக 2017-இல் தமிழ்நாடு முதலமைச்சர் விருது பெற்றுள்ள செல்வ முரளியை உங்களுக்குத் தெரியும். நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த மெட்ராஸ் பேப்பர் இணையத்தளத்தை வடிவமைத்தவர் அவர்தான்…
வாழ்த்துக்கள் “செல்வா”
கட்டுரை பிரமாதம். அதை விட செல்வமுரளி இன்றைய இளைஞர்களின் ஆதர்சம். மிகவும் மகிழ்ச்சி.
பத்தாண்டுகளுக்கு மேலாக அறிந்தவர் என்றாலும் இந்தப் பேட்டிக் கட்டுரை மூலம் செல்வ முரளிக்கு கண்ணி ஆர்வம் ஏற்பட்டது தொடர்பான நிகழ்வு சுவாரசியாக உணர்கிறேன். நமது வாழ்க்கையில் எங்கோ எப்போது உள்வாங்கும் எதோ ஒரு தாக்கம் தான் நம்மை வழி நடத்துகிறது என்பதை செல்வமுரளியின் அனுபவப் பகிர்விலும் உணர முடிகிறது. கட்டுரைக்கு நன்றி.
மத்தூர் குக்கிராமத்தில் இருந்து கொண்டு, நிறைய செயலிகளை செய்ய வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை கொண்ட செல்வ முரளிக்கு, இன்னும் பல திறம்கொண்ட சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்…