சென்னையின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான விக்டோரியா அரங்கம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதியார், விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சர்தார் வல்லப் பாய் படேல் உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகள் உரை நிகழ்த்திய இடம் இது. மதராஸின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. இருந்தும் ஏன் இத்தனை வருடங்கள் புனரமைக்கப்படாமலேயே இருந்தது?
ராணி விக்டோரியா பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பேரரசி. அவர் பிரிட்டிஷ் ராணியாகப் பொறுப்பேற்ற பொன்விழா ஆண்டு 1880களில் வந்தது. இதனைக் கொண்டாடுவதற்காக இந்தியாவிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராணியின் நினைவாக மதராஸில் ஏதேனும் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அலுவலர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.
மேலை நாடுகளில் பெரிய கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் கூடிக்களிக்கும் இடங்களை டவுன் ஹால் என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் போன்றதொரு அமைப்பு மதராஸுக்கும் வேண்டும் என்பது அப்போதைய பிரிட்டிஷாரின், இந்தியச் செல்வந்தர்களின் எண்ணமாக இருந்தது. மதராஸில் அப்போது பொழுதுபோக்குக்கான இடங்கள் குறைவு. மெரீனா கடற்கரை கூட இவ்வளவு நீள அகலமாகாத காலம். பூங்கா நகர் என்று சொல்லப்பட்ட 117 ஏக்கர்களை வளைத்துப்போட்டு அமைக்கப்பட்டிருந்த சிறிய காடு போல அமைந்த பூங்கா மட்டும்தான் ஒரே பொழுதுபோக்காக இருந்தது.















Add Comment