♠ ஜ.ரா. சுந்தரேசன்
யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் முறை வரும்போது கட்டாயம் பூமி விழவைக்கும்.
திருப்பதியிலே பிரசாத அண்டா வற்றவே வற்றாததுபோல எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் தாராளமாக விழலாம்.
ஓசோனுக்கு ஓட்டை விழுவதுபோல, பூமியின் இழுக்கும் சக்திக்கு ஓட்டை விழுந்து அதன் ஆகர்ஷணம் குறைந்து விடுமோ, நாம் விழாமலிருந்து விடுவோமோ என்ற பரபரப்பே வேண்டாம்.
விழுந்தபின் மனமே என்னைப்போல் வாசற்படி அருகே முண்டி அடித்து முன்னேற பிரத்தியேக முயற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை. சொல்லப் போனால் விழுவது என்பது மிகச் சுலபமான ஒரு காரியம். சில காரியங்களைச் செய்வதற்கு யோசனை செய்யவேண்டி துளி நேரமாவது மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் விழுவதற்கு எந்த முன் யோசனையோ மூளை கசக்கல்களோ, பிரத்தியேகமாக எந்தக் குருவிடமோ போய்ப் பாடம் படித்து வரவோ வேண்டுமென்கிற அவசியமோ கிடையாது. விழ வேண்டியவர்களிடம் ஒரு சுதந்திர உணர்வு உண்டு. இந்தப் பரந்த பூமியில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எவரையும் கேட்டுக் கொள்ளாமலே ஏன், தங்களையேகூடக் கேட்டுக் கொள்ளாமல் விழலாம்.
Add Comment