இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு.
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தமது இராணுவத்தை காஸாவில் இறக்கியது. கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டுத்தளங்கள், வணிக வளாகங்களை வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்கியழித்து வருகிறது. அங்கிருந்த ஆயிரக்கனக்கான, லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
“இஸ்ரேல் நடத்திக்கொண்டிருப்பது இனப்படுகொலைதான். இது ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைச் சட்டத்திற்கு புறம்பானது. சரிசெய்யமுடியாத தீவிரமான இழப்புகள் மேலும் ஏற்படுவதற்கு முன் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) முறையிட்டிருக்கிறது தென் ஆப்பிரிக்கா.
சர்வதேச நீதிமன்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் கோர்ட் வகையைச் சேர்ந்தது. உலக நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகளுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றது. (ஐக்கிய நாடுகள் சபையின் கிரிமினல் கோர்ட் தனிநபர் வன்முறையைத் தண்டிக்கவல்லது) இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா இரண்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இருப்பதால், நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும்.
Add Comment