வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவோம் என்றார்கள். தாராளமாக வாருங்கள் என்று அழைத்தாலும், மனத்தில் பதற்றம் வந்தது. முதல் முறையாக வரும் கைக் குழந்தைக்குப் பரிசாகக் கொடுக்க எந்த விளையாட்டுச் சாமானும் வீட்டில் இல்லை. அருகில் இருக்கும் கடைகளில் டைப்பர், பால் புட்டியைத் தாண்டி எதுவும் கிடைக்காது.
ஓரிரு நிமிடங்களில் ஒரு யோசனை தோன்றியது.
செல்பேசியை எடுத்து ஜெப்டோ (Zepto) செயலிக்குச் சென்று, பொம்மைகள் பட்டியலில் அந்த வயதுக் குழந்தைக்கு ஏற்ற சிலவற்றை வாங்க ஆர்டர் போட்டாயிற்று. அடுத்த எட்டாவது நிமிடத்தில் வீட்டின் மணி அடித்தது. பொம்மைகள் வந்துவிட்டன. சில நிமிடங்களில் நண்பரும் வந்தார். அவருடைய குழந்தைக்கு நாங்கள் அளித்த பரிசும் பிடித்துப் போக, புதிய இடத்திலும் அழாமல் விளையாடிக்கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நகரங்களில் நுகர்வோர் வணிகத்தையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் விரைவு அங்காடியின் கதை இது.
2020ஆம் ஆண்டு துபாய் நகரம். ஆதித் பாலிசா (Aadit Palicha), கைவல்யா வோஹ்ரா (Kaivalya Vohra) என்கிற இரண்டு நண்பர்கள். இருவருக்கும் பதினேழு வயது. இருவரின் தந்தைகளும் பொறியாளர்கள். இருவரும் பல அமெரிக்க ஸ்டார்ட் அப் விடியோக்களைப் பார்த்துப் பார்த்து, தாங்களும் பெரியதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று உந்தப்படுகிறார்கள். பெரியளவில் சாதிக்க அதிகமான முதலீடுகள் வேண்டும். அது இருப்பதோ அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில். அங்கே போவதற்குச் சிறந்த வழி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேருவது என்று முடிவெடுத்தனர். விண்ணப்பித்த இருவருக்கும் இடமும் கிடைத்தது. அந்தச் சமயம் பெருந்தொற்று தொடங்குகிறது.
Add Comment