“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவர்கள் என்ன செய்தார்கள்? தற்போது அதை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருப்பது ஏமாற்று வேலை” என்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டில் பேசிய அவர், “மதுரை மிக ராசியான மண். இங்கு ஆரம்பிக்கும் அனைத்தும் வெற்றிதான். எனவேதான் இந்த மாநாட்டை இங்கே நடத்தத் தீர்மானித்தோம்” என்றார். “தி.மு.க.வின் மூலதனமே பொய் தான். கச்சத் தீவைத் தாரை வார்த்தவர்களே அதை மீட்கப் போராடுகிறோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய். ஊழலின் ஊற்றான தி.மு.க.வில் ஒரு அமைச்சர் கம்பி எண்ணுகிறார். இன்னும் பலர் செல்லக் காத்திருக்கின்றனர்” என்றார் அவர். அ.தி.மு.க.வை அச்சுறுத்த நினைப்பது இருக்கட்டும் முதலில் தி.மு.க.வினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்” என்றார். அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் தி.மு.க.வைப் பற்றி மட்டும் பேசிய பழனிசாமி, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரும் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா பற்றியோ பா.ஜ.க. பற்றியோ சொல்லாமல் தவிர்த்து விட்டது கட்சியின் சில மூத்த தலைவர்களுக்கே ஆச்சரியம்தான்.
Add Comment