ப்ளாஸ்டிக் அல்லது மர ஸ்டூல். ஜக்கார்டு ஜரிகை வேலைப்பாடு கொண்ட, பொன்னாடையால் போர்த்தப்பட்டிருக்கும் அந்த ஸ்டூல். மேலே ஒரு தாம்பாளத் தட்டு. வெற்றிலை. அஜந்தா பாக்கு பாக்கட். இரண்டு வாழைப்பழம். அதன் மேல் செருகி வைக்கப்பட்ட ஊதுபத்தி. பின்னணியில் எம்.ஜி.ஆர். புகைப்படம் செங்கல்லால் முட்டுக்கொடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இரண்டு முழம் பூ, மாலையாக அணிவிக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், நினைவு நாளில் சென்னை நகரின் எளிய மக்கள் இருக்கும் தெருக்களில் இதைப் பார்க்கலாம். வீட்டு வாசலிலோ நாற்சந்தி மூலையிலோ இப்படி ஒரு எளிய வணக்கம் இருக்கும். எம்.ஜி.ஆர். எனும் ஆளுமையைத் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு நேசித்தார்கள், நேசிக்கிறார்கள் என்பதற்குச் சான்று இது. எம்ஜிஆர் மறைந்து, அவர் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும் மறைந்த பிறகும்கூட அந்த விஸ்வாசம் தொடர்கிறது.
காங்கிரஸ் கட்சியில் பார்ப்பன ஆதிக்கத்தைக் காரணம் காட்டி வெளியேறிய ஈவெரா தொடங்கியது திராவிடர் கழகம். அவர் தேர்தல் அரசியலில் நுழைய விரும்பவில்லை. இன்னும் சிலபல காரணங்களால் அங்கிருந்து பிரிந்த சி.என்.அண்ணாதுரை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணாவைத் தலைவராக ஏற்றுத் தன் திரைப்படங்களில் திமுகவின் கருத்துகளைப் பரப்பியவர் எம்.ஜி.ஆர். மருதூர் கோபாலகிருஷ்ண மேனன் ராமச்சந்திரன் என்பது முழுப்பெயர். ஆரம்பத்தில், மு.கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நண்பர்களாக வலம் வந்தார்கள். அன்பும் போட்டியும் கலந்த சிக்கலான நட்பு அது. இந்தக் கட்டுரையில் வரும் எல்லா நட்புகளுமே சிக்கலானவைதாம். அண்ணாவின் தம்பிகளாக ஆரம்பத்தில் இணைந்தே பணியாற்றினார்கள் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும். எவ்வளவு ஸ்மார்ட்டான ஃபோன் என்றாலும் ஐஓஎஸ்ஸோ ஆன்ட்ராய்டோ, ஏதேனும் ஒன்றுதானே உள்ளே இருக்கமுடியும்?
Add Comment