மயக்கமா…? கலக்கமா…?
மனிதர்களாகிய நாம் உளறுவது இயல்பு. எப்போதாவது. ஆனால் கருவிகள் உளறுமா? கேள்வியே அபத்தம் போலத் தெரியும். அப்படித்தான் இருந்தது. ஆனால் ஏ.ஐ கருவிகள் மனிதர் போலவே எல்லாமும் செய்ய விழையும் காலம் இது. எல்லாமும் என்றால் மனிதர்களின் குற்றங்களும் குறைகளும் மட்டும் எவ்வாறு விட்டுப் போகும்? அப்படியொரு குறைதான் ஏ.ஐ. மயக்கம். அதன் வெளிப்பாடு ஏ.ஐ. உளறல்கள். ஹாலுசினேஷன்ஸ்.
பெரு மொழிமாதிரிகள் (LLM) நாம் கேட்டவற்றையெல்லாம் செய்துதரும் வல்லமை பெற்றுவருகின்றன. இவை படம் வரைகின்றன. கட்டுரைகள் எழுதுகின்றன. ஒரு பெரிய புத்தகம் ஒன்றையே நொடியில் சுருக்கிக் கொடுத்துவிடுகின்றன. கணிதக் கேள்விகளை அசால்ட்டாகத் தீர்க்கின்றன. நாம் கேட்கும் கேள்விகளுக்கு “டான்…டான்…” என்று பதிலளிக்கின்றன.
இவ்வாறு பதில் சொல்லும் சில வேளைகளில்தான் மேற்சொன்ன உளறல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது? எப்படிக் கண்டறிவது? நாமென்ன செய்ய முடியும்? இவை எப்போதும் இப்படி உளறிக் கொட்டிக்கொண்டே தான் இருக்குமா?
இவ்வாறு எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு எக்ஸாம் ஹாலில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். கேள்வித்தாளைப் பார்க்கிறீர்கள். பதில் தெரிந்த கேள்விகளுக்குச் சமர்த்தாக விடை எழுதி விடுவீர்கள். சுத்தமாய் பதிலே தெரியாத கேள்வி என்றால் விதியை நொந்தபடி விட்டுவிடலாம்.
Add Comment