சதா சண்டையிடும் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டார்களா என்ன? மனித இயல்பே, தெரிந்தே சவாலான சூழலுக்குள் புகுந்து விளையாடிப் பார்ப்பதுதான். அமெரிக்காவின் லூசியானாவில் பிறந்த டூ கே பெண் ‘அலீசா’ இதில் கொஞ்சம் அசாதாரண வல்லுனராக இருக்கிறாள். அவளது பிறப்பின் நோக்கமே செவ்வாய்க் கிரகத்துக்குப் போவதுதான். போனால், பூமிக்குத் திரும்பி வருவது குறித்த ஒரு சதவீத ஆசையும் இருக்கக் கூடாதென்று தெரிந்திருந்தும், அந்தக் கனவில் பல்லாண்டுக் காலமாய் நிலைத்திருக்கிறாள்.
அலீசா கார்ஸன் மூன்று வயதுப் பிள்ளையாக இருந்த போதே தினமும் தன் அப்பாவிடம் செவ்வாய்க்குப் போவது குறித்துப் பேசுவாள். தாயில்லாப் பிள்ளை என்பதால், “உனக்கு எது வேணுமோ,அதைப் பண்ணும்மா” என்று நிஜமாகவே கூறி வந்திருக்கிறார், மிஸ்டர். கார்ஸன். உலகில் வெளிவந்திருக்கும் விண்வெளிப் பயணம் குறித்த கார்ட்டூன்கள், புத்தகங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்தையும் ஒன்று விடாது பார்த்த ஒரே ஐந்து வயதுச் சிறுமி அவளாகத்தான் இருந்திருப்பாள். ஒன்பது வயதில், அவள் படித்த பள்ளிக்கு, ஒரு விண்வெளி வீராங்கனையை அழைத்து வந்திருந்தார்கள். வாய்ப்பை விடுவாளா அலீசா? வந்த வீராங்கனை மிரண்டு போகுமளவு கேள்விப் பெட்டகத்தோடு போய் புகுத்தி எடுத்திருக்கிறாள்.
Add Comment