நம்ப முடியாத அளவுக்கு உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கிறது அமெரிக்கா. காரணமில்லாமல் எதையும் செய்யாத தேசம், இப்போது இதை ஏன் செய்கிறது?
நாற்பது பில்லியன் டாலர். அவசர கால நிதி உதவியாக உக்ரைனுக்குத் தருவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது அமெரிக்கர்கள் யாருமே எதிர்பாராதது. காரணம் கோவிட் தொற்றுக் காலச் சிரமங்களில் இருந்தே அமெரிக்கா இன்னும் மீளவில்லை. கணக்கு வழக்கில்லாத செலவு. பெரிய அளவில் நிதிச் சுமை. இந்நிலையில் உக்ரைனுக்கு நாற்பது பில்லியன் என்பது விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
காரணம், இது வெறும் நிதி உதவியுடன் நிற்கக் கூடிய விவகாரமல்ல. ரஷ்யாவைப் பலவீனப்படுத்தி, அதன்மீது பகிரங்க யுத்தம் அறிவித்து புதினைத் தூக்கி அடிப்பது, அல்லது உக்ரைனுக்கு ஆதரவளித்து அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது என்கிற இரு பெரும் சவால்கள் முன் நிற்கின்றன. இந்த இரண்டுமே உடனே நடக்கக் கூடியதல்ல. நீண்ட கால அவகாசம் தேவைப்படும் காரியங்கள். அப்படியானால் எதுவரை அமெரிக்காவின் பொருளாதார ஆதரவு உக்ரைனுக்கு இருக்க வேண்டும்? திட்டவட்டமாக இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் ஒன்றும் செய்ய முடியாது.
கார்க்கிவ்(Kharkiv) யுத்தத்தில் வெற்றி பெற்றதாக உக்ரெயின் அறிவித்திருக்கிறது. மாரிபூலில் (Mariupol) ரஷ்யாவுக்கு வெற்றி என்று புதின் சொல்கிறார். வெற்றி தோல்வி ஒரு புறம் இருக்க, சிதைந்து சீரழிந்த தேசமும் மக்களும் எப்போது மீண்டெழுவார்கள் என்று இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. ஏனெனில், அமெரிக்கா உள்பட, பல நாடுகளும் தத்தம் அரசியல் சூழ்நிலை, தங்கள் குடிமக்களின் பலன் இரண்டையும் கருத்தில் கொண்டே இந்தப் போரில் நிலைபாடு எடுத்திருக்கின்றன.
அதாவது, திருமண மொய்ப்பணம் எழுதும் முன் எப்படி இதுவரை நடந்த விசேஷங்களுக்கு இரு வீடுகளின் பணப் பரிவர்த்தனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பார்களோ, அதே போலத்தான் இவர்களும் முடிவெடுக்கிறார்கள்…
அம்மா, உக்ரைன் போர் குறித்து அமெரிக்கர்களின் கோணத்தில் தினமும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. சரி போகட்டும். இந்த மில்லியன், டாலர்களை எல்லாம் கொஞ்சம் கோடி, ரூபாயில் மாற்றிச் சொல்லக்கூடாதா?
அடுத்த முறை இரண்டிலுமாக சொல்லலாம்.