குஜராத் மாநிலத்தின் சாலைகளில் இரவு நேரங்களில் ஒரு குழு அனுமன் மந்திரங்களைப் பாடிக்கொண்டும் தேவி ஸ்தோத்திரங்களை உச்சரித்துக்கொண்டும் உற்சாகமாக நடைப்பயணம் மேற்கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்த ஊடக வெளிச்சம் அந்த இரவின் இருள் அகலப் போதுமானதாக இருந்தது.
முகேஷ் மற்றும் நீத்தா அம்பானி இணையரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. தன்னுடைய முப்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரிலிருந்து துவாரகா வரையிலான சுமார் 170 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆன்மீக நடைப்பயணம் மேற்கொண்டார். மார்ச் 29ஆம் தேதி புறப்பட்ட இந்தப் புனித யாத்திரை ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெற்றது. பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் ஆனந்த் அம்பானி ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்தப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். மத்திய அரசு அளித்திருக்கும் Z பிளஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகளும் அவரோடு நடந்து இந்தப் புனித யாத்திரையை நிறைவு செய்திருக்கின்றனர்.
இந்தப் பயணத்தின்போது இறைச்சிக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 250 கோழிகளை விலைக்கு வாங்கினார் ஆனந்த் அம்பானி. அவற்றை தன்னுடைய விலங்குகள் சரணாலயமான வந்தாராவுக்கு அனுப்பிப் பாதுகாக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி ஆனந்த் அம்பானியின் கருணை குணத்தைப் பலரும் மெய்சிலிர்த்துப் பாராட்டிய சம்பவங்களும் நடந்தேறின.
Add Comment