ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீலதா ரெட்டி. அதுதான் நடிகை ரோஜாவின் இயற்பெயர். நாமறிந்த நடிகை ரோஜா இப்படி அண்டை மாநிலத்தைக் கலக்கும் அமைச்சராக ஒருநாள் வருவார் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? இன்று இணையத்தைக் கலக்கும் விடியோக்களில், ரோஜா வீட்டு வீடியோ முதன்மையானது. நகரி தொகுதியில் (அதுதான் அவரது தொகுதி) அவர் கட்டியிருக்கும் மாடமாளிகையை அவரே சுற்றிக் காட்டி மகிழும் அந்த வீடியோவுக்குள் ஒரு வெற்றிக் கதை உள்ளது. அது ரோஜாவின் வெற்றி. நம்ப முடியாத மிகப் பெரிய வெற்றி. ஜெயலலிதாவுக்குப் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்று வென்றிருப்பவர் ரோஜா. ஆனால், ரோஜாவின் வெற்றி அத்தனை எளிதில் சாத்தியமானதல்ல. போராடித்தான் வென்றிருக்கிறார்.
தமிழ் நாட்டிற்கு மிக நெருக்கமான திருப்பதிதான் அவரது பிறந்த ஊர். நாகராஜ ரெட்டி, லலிதா தம்பதிக்கு 1972-ம் ஆண்டு பிறந்தவர். உடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரர்கள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரோஜாவின் அம்மா நர்சிங் கல்லூரியில் முதல்வராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அப்பா ஆவணப்படங்களுக்கு சவுண்ட் இஞ்சினியராகப் பணியாற்றியவர். அவருக்கு படம் இயக்கும் ஆசையும் இருந்தது. அது நிறைவேறாமல் போக, மகளுக்கு வந்த திரைப்பட வாய்ப்பை இழக்கத் தயாராக இல்லை. அப்படி அப்பாவின் ஆசைக்காகத் திரைத்துறையில் நுழைந்தவர் ரோஜா.
Add Comment